பேட்டிங் பயிற்சி எடுத்த வார்னர், பேர்ஸ்டோ : கொல்கத்தாவுக்கு மறக்கமுடியாத அடி: 4-வது இடத்தில் சன்ரைசர்ஸ்

9

வார்னர், பேர்ஸ்டோவின் பேரடி பேட்டிங்கால், ஹைதராபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 38-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விரட்டியடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இதன் மூலம் 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் அணி 4-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி தொடர்ந்து 5-வது தோல்வியைச் சந்திக்கிறது. 10 போட்டிகளில் 4 வெற்றிகள், 6 தோல்விகள் என மொத்தம் 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

‘வேர்ல்ட்கிளாஸ் பேட்டிங்’

உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் என்பதை வார்னரும், பேர்ஸ்டோவும் நிரூபித்துவிட்டனர். கொல்கத்தா அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்த இருவரின் நேர்த்தியான ஷாட்களும், பவர்-ப்ளே ஓவர்களுக்குள் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற வேகம் அணியை வெற்றிக்கு உந்தித்தள்ளியது. இருவரும் 28 பந்துகளில் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.

அதிரடிஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ, வார்னர் : படம் உதவி ஐபிஎல்

 

வார்னர் 38 பந்துகளில் 67 ரன்களில் ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து ஆரஞ்ச் தொப்பியை தக்கவைத்துள்ளார். துணையாக ஆடிய பேர்ஸ்டோ 43 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் . பெங்களூரு அணிக்காக இதேபோன்றுதான் வார்னர் காட்டடி அடித்து சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4-வது முறையாக பேர்ஸ்டோவும், வார்னரும் தொடக்க வீரர்கள் என்ற முறையில் களமிறங்கி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதேபோன்ற அதிரடியால்தான் ராஜஸ்தான், ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றனர். இன்றைய  போட்டி வார்னருக்கும், பேர்ஸ்டோவுக்கும் பேட்டிங் பயிற்சி எடுத்ததுபோல்தான் இருந்தது.

தரமற்ற பந்துவீச்சு

கொல்கத்தா அணியின் பந்துவீச்சு மிக தரமற்ற நிலைக்கு சென்றுவிட்டது. கடந்த போட்டியில் குல்தீப் யாதவ் பந்துவீச்சை அடித்தார்கள் என்பதற்காக அவருக்கு  ஓய்வு அளித்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னரை இன்றும் பயன்படுத்தி இருக்கலாம்.

வார்னர், பேர்ஸ்டோ இருவரின் அதிரடியும் அணைபோடும் அளவுக்கு ஒருபந்துவீச்சாளர் கூட இல்லை என்பது பெரும் பலவீனத்தை காட்டுகிறது. கொல்கத்தா அணியின் பேட்டிங் ரஸலைத்தான்  பெரும்பாலும் நம்பி இருக்கிறது அவர் ஆட்டமிழந்தால் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.

விளாசல் கூட்டணி

தொடக்கத்தில் இருந்தே வார்னரும், பேர்ஸ்டோவும் காட்டடியைக் கையாண்டார்கள். சாவ்லா, பிரித்வி ராஜ், நரேன், கரியப்பா என 4  பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் இருவரின் அதிரடியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. வார்னரும், பேர்ஸ்டோவும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசித் தள்ளினார்கள். பவர்ப்ளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்களும், 10 ஓவரில் 109 ரன்கள் சேர்த்தனர்.

பிரித்விராஜ் வீசிய 13-வது ஓவரில் போல்டாகி வார்னர் 38 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 131 ரன்கள் சேர்த்தனர்.

 

அடுத்து கேப்டன் வில்லியம்ஸன் களமிறங்கி, பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். வில்லியம்ஸன் நிதானமாக பேட் செய்தார். ஆனால், பேர்ஸ்டோ நிலைத்துவிட்டால், அதிரடி தொடர்ந்தது. பியூஸ் சாவ்லா வீசிய 15-வது ஓவரில் பவுண்டரி, இரு சிக்ஸர்கள் அடித்து  வெற்றியுடன் பேர்ஸ்டோ முடித்தார்.

பேர்ஸ்டோ 80 ரன்களிலும், வில்லியம்ஸன் 8 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 15 ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

மோசமான பேட்டிங்

முன்னதாக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கொல்கத்தா ரைட்ரைடர்ஸ் அணியின் நரேன், லின் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

நரேன், லின் முதல் விக்கெட்டுக்கு 42ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ஆனால், அதை நடுவரிசையில் களமிறங்கிய கில்(3), ராணா(11) தினேஷ் கார்த்திக்(6) ஆகியோர் பயன்படுத்தத் தவறிவிட்டனர். அணியில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், கிறிஸ் லின் 45 பந்துகளில்  அரைசதம் அடித்த விஷயம் மட்டும்தான்.

3 விக்கெட்டுகள் வீழ்த்திய கலீல் அகமது : படம் உதவி ஐபிஎல்

 

விக்கெட் சரிவு

50 ரன்கள் வரை ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்த 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதே போலவேகடைசி வரிசையிலும் 124 ரன்களுக்கு 4 விக்கெட்டையும், அடுத்த 25 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளையும் இழந்தது கொல்கத்தா அணி.

தினேஷ் சொதப்பல்

இந்த சீசன் முழுவதும் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் சொதப்பலாக இருந்து வருகிறது. மேட்ச்வின்னராக இருக்கும் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து 5-வது வீரராக களமிறங்கி தன்னை வீணடித்து வருகிறார், விக்கெட்டை நிலைப்படுத்தும் வகையில் 3-வது வீரராகவோ அல்லது தொடக்க வீரராகவோ களமிறங்குவது அவசியமாகும்.

மற்றவகையில் அணியில் எக்ஸ்ஃபேக்டர் வீரர் ஆன்ட்ரூ ரஸல் 2 சிக்ஸர் உள்பட 15 ரன்களில் புவனேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆர்கே சிங் 30 ரன்கள் சேர்த்து சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஸலை களத்தில் நிற்கவிடக்கூடாது என்று திட்டமிட்டு புவனேஷ்வரை பந்துவீசச் செய்தனர். ஒரேமாதிரியாக வீசாமல் யார்கர், புல்டாஸ், பவுண்ஸர் என திணறடித்து எளிதாக வெளியேற்றினர்.

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா அணி. சன்ரைசர்ஸ் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY