தூத்துக்குடியில் புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிலுவை பாதம் நிகழ்ச்சி

4

ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய தினமான புனித வெள்ளிக் கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது- இயேசு சிலுவையை சுமந்து செல்லும் காட்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைப் பாடல்களை பாடினர்.

தூத்துக்குடி: கிறிஸ்தவ மக்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வைக் குறிக்கும் ஈஸ்டர் பண்டிகைக்கு இன்று இரண்டு தினங்கள் உள்ள நிலையில் இயேசு கிறிஸ்துவை சிலுவையை சுமக்க வைத்து பின் அந்த சிலுவையில் அறைந்து அதிலே அவர் உயிர் பிரியும் தினமாக கருதப்படும் புனித வெள்ளி தினம் இன்று உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. பாவிகளை ரட்சிப்பதற்காக வந்த இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் அந்த நிகழ்வை மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் தேவாலயங்களில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கத்தோலிக்க பேராலயமான தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திலும் இன்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி இன்று மதியம் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பிரார்த்தனையின் முடிவில் இயேசு கிறிஸ்து சிலுவையில் சுமந்து செல்வதைக் குறிக்கும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து செல்வது போன்ற மரசிற்பம் இந்த சிலுவைப்பாதையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஆசந்தி சுருபம் என்று அழைக்கப்படும் இந்த சுரூபமானது தூத்துக்குடியிலும் மனப்பாடு ஆகிய இரண்டு தேவாலயங்களில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பனிமயமாதா தேவாலயத்திலிருந்து புறப்பட்ட இந்த சிலுவைப்பாதை பவனி தேவாலயத்தின் நான்கு வீதிகளில் எடுத்து வரப்பட்டது. அப்போது சிலுவைப்பாதையில் கலந்து கொண்ட கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனைப் பாடல்களை பாடிச் சென்றனர்.

புனித வெள்ளியை முன்னிட்டு இன்று கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோர் இன்று முழுவதுமாக உபவாசமிருந்து தேவாலயங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். இந்த சிலுவைப்பாதை நிகழ்வின் போது ஏராளாமான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது சுடுமணலில் முழங்காலிட்டு பிராத்தனை செய்தனர். சிலுவைப்பாதை மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு மக்களின் தாகம் தீர்ப்பதற்காக தேவாலயங்களிலும் கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

LEAVE A REPLY