பொள்ளாச்சி பாலியல் வழக்கை வைத்து விளம்பரம்: சர்ச்சையில் ‘அயோக்யா’ படக்குழு

13
பொள்ளாச்சி

‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறையை முன்வைத்து, ஏப்ரல் 19-ம் தேதி ‘அயோக்யா’ வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷி கண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கோபத்துடனும், வேதனையுடனும் பதிவிட்டு வரும் இந்த நிலையில், அயோக்யா படத்தின் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், “நாலு பேரை கொல்றதுக்கு ஐஞ்சு நிமிஷம் போதும். நடந்த கொடுமைக்கு அவங்கள தூக்குல ஏத்தணும். அப்ப தான் இந்த மாதிரி வெறி பிடிச்சவனுங்க பொண்ணுங்கள தொடவே பயப்படுவானுங்க” என விஷால் கேமராவைப் பார்த்து ஆவேசமாகப் பேசுவது போல அந்தக் காட்சி அமைந்துள்ளது.

இந்தக் காட்சியை பலர் ட்விட்டரில் பகிர, இப்படியான சூழ்நிலையில் இதையும் வைத்து படத்துக்கு விளம்பரம் தேடுகிறார்களே, விஷாலின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என படக்குழு எதிர்பாராத வண்ணம் எண்ணற்ற எதிர்மறையான கருத்துகளே எதிர்வினையாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் இந்த வீடியோவப் பகிர்ந்தவர்கள் அந்த ட்வீட்டுகளை நீக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY