மத்திய அரசு மீண்டும் கொண்டு வந்த முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

4
மத்திய

மத்திய அரசு மீண்டும் கொண்டு வந்த முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

முஸ்லிம் ஆண் 3 முறை தலாக் என்று கூறி தனது மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று புகார் எழுந்தது. இதையடுத்து முத்தலாக் வழக்கத்தை குற்றமாகக் கருத வகை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை மற்றும் பாதுகாப்பு) மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து முத்தலாக் தடை அவசர சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு பிறப்பித்தது.

அதன்பின், மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதன்படி, 3 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. 1.முத்தலாக் விவகாரத்தில் கணவன் மீது அவரது மனைவி அல்லது உறவினர்கள் மட்டுமே புகார் அளிக்கலாம். அக்கம்பக்கத்தினர் அல்லது மற்றவர்கள் புகார் அளிக்க முடியாது. 2.மைனர் குழந்தைகள் இருந்தால், அவர்கள் மனைவியிடம்தான் இருக்க வேண்டும். 3.இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முத்தலாக் கூறிய கணவனுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக மாஜிஸ்திரேட் முடிவெடுக்கலாம். இந்த 3 திருத்தங்களுடன் கடந்த கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியால் முத்தலாக் தடை திருத்த மசோதாவை தாக்கல் செய்ய முடியவில்லை. அந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 9-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

பொதுவாக அவசர சட்டம் பிறப்பித்தால், அதை 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும். இல்லையென்றால் அவசர சட்டம் காலாவதியாகி விடும். அவசர சட்டம் பிறப்பித்த பிறகு, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கினால் அடுத்த 42 நாட்களுக்குள் அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்டம் இயற்ற வேண்டும். அப்படி செய்யாவிட்டாலும் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிந்துவிட்டதால், கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட முத்தலாக் அவசர சட்டம் வரும் 22-ம் தேதியுடன் காலாவதியாக உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மீண்டும் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி முத்தலாக் தடை அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்துவிட்டார். இதையடுத்து, 3 முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்டவிரோதமாகக் கருதப்படும். அத்துடன் அந்த விவாகரத்து செல்லாததாகி விடும். முத்தலாக் கூறும் முஸ்லிம் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த அவசர சட்டத்தின்படி, முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாக கருதப்பட்டாலும், விசாரணை தொடங்குவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கணவர் மாஜிஸ்திரேட்டை அணுகி ஜாமீன் கோரலாம். ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றங்களில், போலீஸ் நிலையத்திலேயே ஜாமீன் வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY