விடிய விடிய சிறப்பு பேருந்துகள் இயக்கம்; 5 லட்சம் பேர் பயணித்தனர்: இதுவரை ரூ.16 கோடி வசூல்- அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

1
இயக்கம்

பொங்கல் பண்டிகை இன்று (14-ம் தேதி) முதல் 17-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை கொண்டாடும் வகையில், கடந்த 3 நாட்களாக மக்கள் படிப்படியாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றர். குறிப்பாக நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களின் வசதிக்காக கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், கே.கே.நகர் மற்றும்பூந்தமல்லி பேருந்து நிலையங் களில் இருந்து விடிய,விடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பேருந்துகளின் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஆய்வு நடத்தினார். பேருந்துகளை பாதுகாப்பாக ஓட்டிச்செல்ல வேண்டுமென ஓட்டுநர் களிடம் அவர் அறிவுறுத்தினார். சென்னையில் இருந்து நேற்று மட்டுமே 1,307 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 3,582 பேருந்து கள் இயக்கப்பட்டன.

சொந்த ஊருக்கு செல்ல மக்கள் திரண்டதால் அண்ணாசாலை, ஜிஎஸ்டி மற்றும் சென்னையின் உட்புறச்சாலைகளிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தினர். இதேபோல், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் இருக்கை பிடிக்க நீண்ட தூரத்துக்கு வரிசையில் மக்கள் காத்திருந்தனர். பயணிகளை போலீஸார் ஒழுங்குப்படுத்தி அனுப்பினர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகளில் மட்டும் இதுவரையில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுமார் ரூ.16 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இன்றும் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சென்னையில் இருந்து இன்று 3,582 பேருந்துகள் இயக்க வுள்ளோம்’’ என்றனர்.

LEAVE A REPLY