ஆய்வாளர் சுபோத்தை சுட்டது எனது மகன் அல்ல –ராணுவ வீரரின் தாய் மறுப்பு

9
ஆய்வாளர்

புலந்த்ஷெஹரில் நடைபெற்ற கலவரத்தில் சுபோத் குமார் சிங்கை சுட்டது தனது மகன் அல்ல என ராணுவ வீரரின் தாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை பசுவதையை மையமாக வைத்து மஹாய் கிராமத்தில் நடந்த கலவரத்தில் சாய்னா காவல்நிலையத்தின் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு ஆய்வாளரின் உயிரை பலிவாங்கியதாகக் கூறப்பட்டது.

இந்த கொலை வழக்கில், கலவரத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தளத்தின் மாவட்ட அமைப்பாளர் யோகேஷ் ராஜ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தலைமறைவாக உள்ள நிலையில் சுபோத்தை அவரது துப்பாக்கியை பிடுங்கி சுட்டது ராணுவ வீரரான ஜீத்து எனத் தெரியவந்தது.

கலவரத்தின் போது எடுக்கப்பட்ட பலரது கைப்பேசிகளின் வீடியோ பதிவுகளில் சுபோத்தை ஜீத்து சுடும் காட்சி ஆதாரமாகக் கிடைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதை ஜூத்துவின் தாயாரான ரத்தன் கவுர் மறுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ரத்தன் கவுர் கூறும்போது, ‘எனது மகன் கார்கிலில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறான். அவன் மீது உபி போலீஸ் வீண்பழி சுமத்துகிறது. ஜீத்து ஆய்வாளரை சுட்டது உண்மை எனில், நானே என் மகனை எனது கையால் கொன்று விடத் தயாராக உள்ளேன்.’ எனத் தெரிவித்தார்.

அதேசமயம், விடுமுறையில் தன் மஹாய் கிராமம் வந்த ஜீத்து, கலவர நாள் வரை இருந்து விட்டு பணிக்கு திரும்பியதாகவும் அவரது குடும்பத்தார் ஒப்புக் கொள்கின்றனர். ஜீத்துவை பிடிக்க உபி போலீஸின் இரு படைகள் ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளனர்.

இதனிடையே, கலவர வழக்கில் சுமார் 70 பெயர்களை குறிப்பிட்டிருக்கும் சயானா போலீஸாரின் குற்றப்பதிவேட்டில்,

11 ஆவதாக ஜீத்து எனும் ராணுவ வீரர் என இடம் பெற்றுள்ளார். இதை வீடியோவில் உறுதி செய்த பின் ஜீத்துவின் வீட்டிற்கு வந்த போலீஸார் அவரது 80 வயது தந்தை ராஜ்பால் சிங்கை அழைத்து சென்று துன்புறுத்தியதாகவும் புகார் கிளம்பி உள்ளது.

LEAVE A REPLY