தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசுக்கு பின்னடைவு; சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

4
தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலை காரணமாக தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கிறது என மாவட்டம் முழுதும் மக்கள் திரண்டு தொடர் போராட்டங்கள் நடத்தினார்கள். இதில் 100-வது நாள் போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மனு கொடுக்கச் சென்றபோது போலீஸார் தடுத்தனர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் எவ்வித முன் அனுமதியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சிலரையும் குறிவைத்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. வழக்கமாக துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளை பயன்படுத்தாமல் பிஸ்டல் வகை, எஸ்.எல்.ஆர் வகை, 303 ரைபில் மற்றும் கார்பன் ரக வகைகளை சேர்ந்த 17 துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், தூத்துக்குடி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது IPC 302 பிரிவில் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கதிரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்.

சி.பி.ஐ விசாரணை உத்தரவிட்டதோடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் சி.பி்ஐ விசாரிக்க தடைகோரியும், ஆட்சியர், கண்காணிப்பாளர் மீது கொலை வழக்கு பதியவும் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது

அந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று மறுதுவிட்டனர். இந்த மனுவுக்கு சி.பி.ஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்

LEAVE A REPLY