மோசமான திசையில் செல்லும் ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?

9

பன்னாட்டு நிறுவனம் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்ற மக்கள் மீது தமிழகக் காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டின் உஷ்ணத்தையும் கசிந்த ரத்தத்தின் சுவட்டையும் யாரும் இன்னும் மறந்திருக்க முடியாது. இதற்கு முன் தமிழகத்தில் ஒரே நாளில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு என்று ஒன்று நடந்ததில்லை. தூத்துக்குடி மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதிர்ந்து, கண்டித்த நிகழ்வு அது.

ஸ்டெர்லைட் கடந்துவந்த பாதை

இந்தியாவில் மகாராஷ்டிரத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்க முதலில் முயன்றார்கள். ரத்தினகிரியில் ஆலைக் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது அப்பகுதி மக்களின் தீவிரப் போராட்டத்தால், 1992-ல் மகாராஷ்டிர அரசு அந்த அனுமதியை ரத்துசெய்தது. அடுத்து, குஜராத்தில் ஆலையைத் தொடங்க ஸ்டெர்லைட் அனுமதி கோரியது. உள்ளூர் மக்களின் உடனடி எதிர்வினையால் குஜராத் அரசு மறுத்துவிட்டது. அடுத்து அவர்கள் தமிழகத்தை நாடினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தூத்துக்குடியில் இந்த ஆலை திறக்கப்படுவதற்கு 1995-ல் அனுமதி வழங்கியது. பின்னர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் அரசு இந்த ஆலையின் விரிவாக்கத்துக்கு 2006-ல் அனுமதி வழங்கியது.

தொழில்மயமாக்கலில் காட்டப்பட்ட கவனம் தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் காட்டப்படவில்லை. அரசு பெயரளவுக்குச் சொல்லும் வழிமுறைகளையும்கூட தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மைத் தொழிற்சாலைகள் பின்பற்றுவதில்லை. அரசு அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. விளைவாக, தூத்துக்குடி இன்று சுகாதாரக் கேடுகள் நிரம்பிய நகரங்களில் ஒன்றாகிவிட்டது. தூத்துக்குடி மக்களைக் கேட்டால் புற்றுநோய், மூச்சுத்திணறல், சிறுநீரக பாதிப்பு, தோல் நோய், கருப்பை பாதிப்பு, மலட்டுத்தன்மை ஏற்படுவதாகப் புலம்புகிறார்கள். மண்ணும் நீரும் காற்றும் நஞ்சாகிவிட்ட சூழலிலேயே தூத்துக்குடி மக்கள் தங்களைச் சுற்றியிருக்கும் தொழிற்சாலைகளைக் கோபக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கினார்கள். ஸ்டெர்லைட் ஆலை இந்தக் கோபத்தின் மையம் ஆனது. அதன் ஒரு பகுதியாக சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

நீதிமன்றம் சொன்னது என்ன?

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தர்மா ராவ் மற்றும் பால் வசந்தகுமார் அமர்வு, மக்கள் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பல ரிட் மனுக்களை அனுமதித்து 28.09.2010-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. அது, மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. குறிப்பாக ஸ்டெர்லைட்டின் வாதத்தையும், மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வாதாடியதையும் நிராகரித்தது இத்தீர்ப்பு.

இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றம் முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ரத்துசெய்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய, மாநில அரசுகள் எடுத்திருந்தால், உச்ச நீதிமன்றம் இப்படி உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்துசெய்திருக்காது. ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது என்பதாலும் லைசென்ஸ் இன்றி இயங்கியது என்பதாலும் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து, அந்த ஆலை செயல்பட தீர்ப்பு வழங்கியது. மீண்டும் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்தன.

வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம்

சாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து 2018 பிப்ரவரி 12 முதல் தொடங்கிய அறவழியிலான போராட்டம் உண்மையாகவே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போராட்டம். பல்லாயிரக்கணக்கானோரை ஒருங்கிணைத்த இந்தப் போராட்டக் குரலுக்கு நூறு நாள் வரை செவிசாய்க்கவில்லை நம்முடைய அரசு என்பது துரதிருஷ்டவசமானது. நூறாவது நாளான மே 22 அன்று நடத்தப்பட்ட பேரணிதான் துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது. இதன் தொடர்ச்சியாக மே 28 அன்று பிறப்பித்த அரசாணையின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் கொள்கை முடிவை எடுத்தது தமிழக அரசு. இதனூடாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். இதை எதிர்த்து சட்டப் போராட்டத்தில் இறங்கியது ஸ்டெர்லைட் ஆலை.

செயல்படாத பசுமைத் தீர்ப்பாயம்

சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிப்பதற்குப் பதிலாக பசுமைத் தீர்ப்பாயங்களை அமைத்து 2010-ல் சட்டம் இயற்றியது மத்திய அரசு. அதன்படி சென்னையிலும் ஒரு பசுமைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இத்தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக நீதித் துறை உறுப்பினர்களும், தொழில்நுட்ப உறுப்பினர்களும் இருப்பர். சென்னையில் இரு பிரிவு உறுப்பினர்களும் ஓய்வுபெற்ற பின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால், இங்குள்ள பசுமைத் தீர்ப்பாயம் செயலிழந்துவிட்டது. ஸ்டெர்லைட் ஆலை டெல்லியில் உள்ள தலைமைப் பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது.

இந்த வழக்கில் தங்களை ஒரு சாராராக ஏற்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவின் தலைவி பேராசிரியர் பாத்திமா, வணிகர் சங்க நிர்வாகி ராஜா, மார்க்ஸிஸ்ட் கட்சி நிர்வாகி அர்ஜுனன், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோர் மனு அளித்தனர். இந்த நால்வரையும் ஸ்டெர்லைட் வழக்கில் தலையீட்டாளர்கள் என்றது பசுமைத் தீர்ப்பாயம்.

இவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டினர். “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் அரசாணை தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால், அதை விசாரிக்கும் அதிகாரம் உயர் நீதி மன்றம் அல்லது உச்ச நீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு. பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை” என்பதே அது. ஆனால், இந்த விஷயத்தை முதல் பிரச்சினையாக விசாரித்துத் தீர்ப்பளிக்க டெல்லி பசுமைத் தீர்ப்பாயம் மறுத்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் மேற்சொன்ன பிரச்சினையையும் விசாரிக்க உத்தரவிட்டதே தவிர, இதனை முதல் பிரச்சினையாக விசாரிக்க உத்தரவிடவில்லை.

நீதிபதிகள் மேலான ஆட்சேபணை

பசுமைத் தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் மொத்தம் 3 நபர்கள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்கப்போவதாகக் கூறியது. அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பசுமைத் தீர்ப்பாயம் வழக்கை விசாரிக்கும் என்றது. தமிழகத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நன்மதிப்புள்ள நீதிபதிகள் கே.பி.சிவசுப்ரமணியம் அல்லது கே.சந்துரு போன்ற எவரேனும் ஒருவரை நியமிக்கலாம் என்றும் பசுமைத் தீர்ப்பாயம் முன்மொழிந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற எந்த உயர் நீதிமன்ற நீதிபதியையும் இந்த வழக்கில் நியமிக்கக் கூடாது என்றும் தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் அனைவருமே ஸ்டெர்லைட் விஷயத்தில் ஒரு சார்பானவர்கள் என்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஸ்டெர்லைட் ஆலை. துரதிருஷ்டவசமாக, ஸ்டெர்லைட் ஆலையின் இந்த வாதத்தை ஏற்று தன் முன்மொழிவைக் கைவிட்டது பசுமைத் தீர்ப்பாயம். தொடர்ந்து மேகாலயா உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலை விசாரணைக் குழுத் தலைவராக நியமித்தது பசுமைத் தீர்ப்பாயம். ஒட்டுமொத்த தமிழக நீதிபதிகளையும் கொச்சைப்படுத்தும் தமிழக நீதிபதிகள் மீதான ஸ்டெர்லைட் ஆலையின் குற்றச்சாட்டைத் தமிழ்நாடு அரசு கண்டித்திருக்க வேண்டும். ஓய்வுபெற்ற தமிழக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மனு போட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை.

தமிழக அரசின் தவறுகள்

நீதிபதி தருண் அகர்வால் தன்னுடைய பணிக்காலத்தில் காசியாபாத் பிராவிடண்ட் பண்டு முறைகேடு சம்மந்தமான பிரச்சினையில் ஆதாயம் அடைந்தவர் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டவர். இதனால், அவர் தலைமை ஏற்பதைத் தலையீட்டாளர்கள் சார்பில் பேராசிரியர் பாத்திமா ஆட்சேபித்தார். தமிழ்நாடு அரசும் நீதிபதி தருண் அகர்வால் நியமனத்தை ஆட்சேபித்திருக்க வேண்டும்; அப்படிச் செய்யவில்லை. அதேபோல, மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு, “முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த 28.05.2018 தேதிய அரசாணை வலுவற்றதாக உள்ளது” என்று சுட்டிக்காட்டிய பின்பும், தமிழக அமைச்சரவை கூடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை அமைச்சரவை முடிவாக எடுக்கத் தவறியது.

முறையற்ற விசாரணை

நீதிபதி தருண் அகர்வால் குழுவின் முன் பல வால்யூம் ஆவணங்களை ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்தது. வழக்கில் தலையீட்டாளர்களுக்கான ஆவணங்கள் அந்த நால்வருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்கப்படவில்லை. “ஆவணங்களை ஒரு தரப்புக்குத் தர மறுப்பது, அத்தரப்பின் கருத்தை எடுத்துரைக்கும் வாய்ப்பை மறுப்பதாகும்; இது நீதிக்குப் புறம்பானது” என்று நால்வர் தரப்பிலும் வாதாடியும், ஆவணங்களை வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட்டுக்கு நீதிபதி தருண் அகர்வால் குழு உத்தரவிட மறுத்துவிட்டது. தருண் அகர்வால் தலைமையிலான குழு சென்ற வாரம் 48 வால்யூம்கள் அடங்கிய அறிக்கையை பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் நகல்களும்கூட தலையீட்டாளர்கள் நால்வருக்கும் தரப்படவில்லை. பசுமைத் தீர்ப்பாயமும் அவர்களுக்கு அறிக்கை நகல்களைத் தர உத்தரவிட மறுத்துவிட்டது. இது வழக்கில் தலையீட்டாளர்கள் நால்வருக்கும் உரிய வாய்பை மறுப்பதோடு இயற்கை நீதியை மீறிய செயலும் ஆகும்.

இந்த அறிக்கையின் மீதான வாதத்தை உடனடியாக சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், வழக்கில் தலையீட்டாளர்கள் நால்வரும் அவர்கள் தரப்பு வாதத்தை முன்வைத்திட அனுமதி மறுத்தது. மாறாக, தமிழக அரசுக்கு அவர்கள் உதவலாம் என்று கூறியது. இது வினோதமானது. இந்த நால்வரையும் வழக்கில் தலையீட்டாளர்கள் என்று பசுமைத் தீர்ப்பாயம் தொடந்து கூறுவதே இதன் மூலம் அர்த்தமற்றதாகிவிட்டது. முக்கியத்துவம் மிக்க தருண் அகர்வால் குழு அறிக்கையைக்கூட இன்னும் பசுமைத் தீர்ப்பாயம் அதன் இணையதளத்தில் வெளியிடவில்லை. இது சரியானது அல்ல.

தருண் அகர்வால் குழுவின் வரம்புமீறல்

தருண் அகர்வால் குழுவானது ஆவணங்களையும் சாட்சியங்களையும் திரட்டி உரிய குறிப்பை அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றே பசுமைத் தீர்ப்பாயம் கூறியது. ஆனால், தன்னுடைய அதிகார வரம்பை மீறி, ”ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லும் தமிழக அரசின் ஆணை நியாயமற்றது” என்று தருண் அகர்வால் குழு தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையானால், தருண் அகர்வால் குழு அதிகார வரம்பை மீறிய செயல் அது. தமிழக அரசின் உத்தரவு நியாயமானதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது பசுமைத் தீர்ப்பாயமே.

அரசும் தீர்ப்பாயமும் செய்ய வேண்டியது என்ன?

ஒரு ஜனநாயக நாட்டில் எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமானது மக்கள் நலன். அவர்களுடைய குரல். இந்த வழக்கு வெறுமனே ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. சுற்றுச்சூழல் விஷயத்தில் இந்த நாட்டின் நீதி அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பது தொடர்பானதும் இதில் உறைந்திருக்கிறது. நீதி அமைப்புகள் பாரபட்சமாகச் செயல்படுவதாக மக்கள் மத்தியில் எண்ணம் உருவானால் அதைக் காட்டிலும் ஜனநாயகத்துக்குக் கேடு ஏதும் இல்லை. பசுமைத் தீர்ப்பாயம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த வழக்கு சென்றுகொண்டிருக்கும் மோசமான திசையை உணர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உள்ளபடியே அது மூட விரும்புகிறது என்றால், காலந்தாழ்த்தாமல் இப்போதேனும் தமிழக அமைச்சரவையைக் கூட்டி அதன் முடிவாக ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை அறிவிக்க வேண்டும்.

LEAVE A REPLY