மேகேதாட்டு அணை விவகாரத்தை விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்தலாம் …

3
மேகேதாட்டு

இதன்மூலம் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்ள முடியும். தமிழக நலனுக்கு எதிரான இந்த அனுமதியை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன. மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழக அரசுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச் சதி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான ஆய்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்பது சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு பலத்த எதிர்ப்பைக் காட்டாததால் மத்திய அரசு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும்.

மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி பாசன மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும்.

எனவே, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்கும் வரை காத்திராமல் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளுக்கு மத்திய நீர்வள அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளுக்கு எதிரான செயல் ஆகும். மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசின் அனுமதியை கேட்காமல் மத்திய அரசு அனுமதி அளித்ததே காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான செயலாகும்.

இந்நிலையில் இந்த விவகாரம் பெரிதாகி உள்ள நிலையில் மேகேதாட்டு அணை குறித்து பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்க்கலாம், அதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மேகேதாட்டு அணை தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதம் ஒரு தவறான புரிதலை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விரிவாக விளக்கத் தயாராக உள்ளதாகவும் அதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒரு சுமுகமான தீர்வுக்கு வர விரும்புகிறோம். இது குடிநீர் தேவைக்கான அணை. பருவமழை காலத்தில் கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு திறந்துவிடப்படும் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதைத் தேக்கி வைப்பதற்கான இந்தத் திட்டம் தமிழகத்துக்கு எதிரானது அல்ல.

ஆனால் இது தமிழக நலனுக்கு எதிரானது போன்ற தோற்றத்தை தமிழக மக்களிடையே பரவியுள்ளது. இதைப் பேச்சுவார்த்தை மூலம் தெளிவுபடுத்த நேரம் ஒதுக்கவேண்டும். என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதுபோன்ற விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசம் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

இன்று கூட உள்ள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் கர்நாடக அமைச்சர் சிவக்குமாரின் கடிதமும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY