மேகேதாட்டு அணைப்பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் போட தைரியமில்லாத அரசு: ஸ்டாலின் கண்டனம்

5
கஜா

கஜா புயல் பாதிப்பு குறித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நாளையும் நீட்டிக்க கோரிக்கை வைத்தும், அதனை சபாநாயகர் ஏற்காதது குறித்தும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக நலனைப்புறக்கணிக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாட்டுப்பகுதியில் அணைக்கட்ட முயற்சிப்பதற்கு ஆய்வுப்பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைக்கடிக்கும் வகையில் சிறப்பு சட்டப் பேரவைக்கூட்டம் இன்று நடந்தது. இதில் திமுகவும் கூட்டணிக்கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்துக்கொண்டனர்.

மேகத்தாட்டு அணைப்பிரச்சினை குறித்து கூடிய சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துக் கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

“மேகேதாட்டுவில் அணை கட்டும் பிரச்னை குறித்து இன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தின் மூலமாக ஒரு தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. திமுகவைப் பொறுத்தவரையில் அந்தத் தீர்மானத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி பாகுபாடின்றி இது தமிழக மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்னை என்ற காரணத்தால் நாங்கள் ஆதரித்து பேசியிருக்கிறோம்.

அதேநேரத்தில் நான் ஒரு கோரிக்கையை எடுத்து வைத்தேன். நியாயமாக ஆணையத்தை கண்டிக்கிற நேரத்தில் மத்திய அரசையும் கண்டித்து அந்தத் தீர்மானம் இடம்பெற்றிருக்க வேண்டும். வெறும் வேண்டுகோள் கேட்கக்கூடிய வகையில் தான் அந்தத் தீர்மானம் அமைந்திருக்கிறது.

ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தால் அது முழுஅளவில் நிறைவடையக் கூடிய நிலையில் இருந்திருக்கும் என்ற கருத்தை எடுத்துச் சொன்னேன். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும் அந்தத் தீர்மானத்தை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்களுடைய வாழ்வாதாரத்தை அடிப்படையாக வைத்து அதை நாங்கள் ஆதரித்து நிறைவேற்றி தந்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, இன்று ஒரு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டிய நீங்கள் நாளையும் இந்த சிறப்புக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தினேன். அண்மையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் டெல்டா பகுதி மக்களுக்கு முழுமையான நிவாரணம் போய் சேரவில்லை.

அதேபோல், மத்திய அரசும், மாநில அரசு கேட்டிருக்கக்கூடிய நிதியை தருவதற்கான முயற்சியில் இதுவரையில் ஈடுபடவில்லை. எனவே, அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும். எனவே நாளையும் இந்த அவையை நீடித்து நடத்திட வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு நான் ஒரு வேண்டுகோள் எடுத்து வைத்தேன்.

அந்த வேண்டுகோளை பேரவைத் தலைவரோ, இந்த அரசோ ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை திமுக சார்பில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY