ஸ்ரீசித்தர் பீடத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வளம் பெறவேண்டி சிறப்பு மஹாயாக வழிபாடு

14
ரீசித்தர்நகர் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் அப்பாதிப்பில் இருந்து விடுபட்டு, வளம் பெறவேண்டி சிறப்பு மஹாயாக வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் சித்தர் பீடத்தில் மிகப்பிரமாண்டமான ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி மற்றும் பிரதோஷ நாட்களில் மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தரால் மிகசிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, கார்த்திகை மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு மஹாயாகம் நடைபெற்றது. உலகில் வரும்காலங்களில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், தமிழகத்தில் கஜா புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் அப்பாதிப்புகளில் இருந்து விடுபட்டு மனம் அமைதி பெறவேண்டியும், மீண்டும் அங்கு பசுமைவளம் சிறந்து மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்திடவேண்டியும், மக்கள் அனைவரும் நலமாக வாழ்ந்திடவும் வேண்டியும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மஹாயாகம் நடைபெற்றது.
சிறப்பு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குருசீனிவாச சித்தர் தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து சிறப்பு மஹா யாகமும், ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், மஹா தீபாரதனையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறப்பு மஹாயாக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குருசீனிவாச சித்தர் தலைமையில், சித்தர்பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY