மாவட்ட செயலாளர் ஆகிறார் எஸ்.பி.சண்முகநாதன் ?- அ.தி.மு.க வட்டாரத்தில் தகவல் !

90

அ.தி.மு.க-வில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதன் இன்னும் ஒருவாரத்தில் நியமிக்கபட இருக்கிறார் என தகவல் சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க-வில் தற்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளராக சி.த,செல்லப்பாண்டியன் இருந்து வருகிறார். அந்த பொறுப்பிற்கு வருவதற்காக ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ-வான எஸ்.பி.சண்முகநாதன் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க இரண்டாகி, ஒன்றாகியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என்கிற இரண்டணியை சேர்ந்தவர்களும் தற்போது ஒன்றாகத்தான் பணியாற்றி வருகிறார்கள். எனினும் பதவி வாங்கி கொடுப்பதில் அவ்விரு அணிகளுக்குள்ளும் போட்டி இருந்து வருகிறது.

ஓ.பி.எஸ் அணியை சேர்ந்தவர்களுக்கு பெரிய அளவில் பதவிகள் கிடைக்க வில்லை என்கிற மனக்குமுறல் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்தவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்காகவே சிலர், ஓ.பி.எஸ் அணியைவிட்டு விலகி எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவி வருகிறார்களாம்.

இதுவரை ஓ.பி.எஸ் அணி என சொல்லப்பட்டு வந்த எஸ்.பி.சண்முகநாதன், தற்போது இ.பி.எஸ் அணிக்கு தாவிவிட்டார் என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆக வேண்டும் என கடுமையாக முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தற்போதுள்ள மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு மிக நெருக்கமான ஆதரவாளராக இருந்து வருகிறார்.

அதனால் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செல்லப்பாண்டியன், சண்முகநாதன் ஆகிய இரண்டுபேரையும் மாவட்ட செயலாளர் ஆக்கிவிடலாம் என தலைமை யோசனை செய்கிறதாம். ஆனால் சண்முகநாதன் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பொறுப்பை மட்டுமே லைக் செய்கிறாராம்.

இன்னும் ஒரு வாரத்தில் சண்முகநாதனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுவிடும் என மேலிட தகவல் சொல்லப்படுகிறது. தேர்தல் சமயங்களில் எஸ்.பி.சண்முகநாதன்தான் பெரும்பாலும் மாவட்ட செயலாளராக இருந்திருக்கிறார்.

எனவே சண்முகநாதன், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராகவோ அல்லது மாவட்டத்தை இரண்டாக பிரித்து அதில் ஒரு பிரிவு செயலாளராகவோ ஆவது உறுதி என்கிறார்கள் !

ஆனால் கட்சியில் சிலரோ, ‘’இதையே ரொம்ப காலமா சொல்லி கொண்டு இருக்கிறாங்க. அது ஒண்ணும் நடக்காது’’ என்று மறுக்கிறார்கள்.

LEAVE A REPLY