திருந்தவேமாட்டார்களா?: இந்திய அணியைக் கிண்டல் செய்து ஆஸி. நாளேடு செய்தி:ரசிகர்கள் கண்டனம்

8
ஆஸி

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியையும், கேப்டன் விராட் கோலியையும் கிண்டல் செய்து ஆஸி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்களே கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்லும் வெளிநாட்டு அணிகளை தரக்குறைவாக கிண்டல் செய்வதும், செய்தி வெளியிடுவதையும் அங்குள்ள ஊடகங்கள் சில வாடிக்கையாக வைத்துள்ளன. தென் ஆப்பிரிக்க, இந்திய, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து  போன்ற வலிமையான அணிகள் அங்கு விளையாடும் போது கிண்டல் செய்திகள் தொடர்ந்து வந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி சென்றிருந்தபோது இந்திய அணியின் தோல்வியை விமர்சித்துக் கிண்டல் செய்து செய்தி வெளியிடப்பட்டது.

அந்நாட்டு வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் பந்தைச் சேதப்படுத்தும் குற்றச்சாட்டில் சிக்கி அந்நாடு கிரிக்கெட் உலக அளவில் அவமானத்தைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில் அங்கிருக்கும் கிரிக்கெட் கலாச்சாரத்தை இன்னும் மோசமாக்கும் வகையில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகின்றன.

அடிலெய்ட் மைதானத்தில் வரும் 6-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி அடிலெய்ட் போய் சேர்ந்தவுடன் அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு நாளேடு ஒன்று இந்திய அணியைக் கிண்டல் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அணியை கிண்டல் செய்து வெளியான செய்தி :படம் உதவி ட்விட்டர்

 

வழக்கத்தைக் காட்டிலும், ஆஸ்திரேலியாவுக்கும் கடும் மிரட்டல் விடுக்கும் வகையில் மிக வலிமையுடன் இந்திய அணி இருப்பதால், அவர்களின் மனவலிமையைக் குலைப்பதற்காக இதுபோன்ற செய்தியை ஆஸி. ஊடகம் வெளியிடுகிறதா எனத் தெரியவில்லை.

இந்திய அணி வீரர்களின் புகைப்படத்தைபதிவிட்டு, ‘தி ஸ்கார்டி பேட்ஸ்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, வேகப்பந்துவீச்சைப் பார்த்து பயந்து ஓடுபவர்கள், பகலிரவு டெஸ்ட் போட்டியைப் பார்த்து பயப்படுபவர்கள் ஒட்டுமொத்தமாக இந்திய அணி அனைத்துக்கும் அச்சப்படுபவர்கள் என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்திக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உண்மையான கிரிக்கெட் கலாச்சாரம் இதுவல்ல, இதுபோன்ற செய்திகள், நமது கிரிக்கெட் கலாச்சாரத்தை மேலும் நாசமாக்கும் என்று கண்டித்துள்ளனர்.

ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த ஆஸி.பத்திரிகையாளர்

 

ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் ரிச்சார்ட் ஹின்ட்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தச் செய்தியை பதிவிட்டு, சிறுபிள்ளைத்தனமாகச் செய்தி வெளியிட்டுள்ளார்கள், கிரிக்கெட் கலாச்சாரத்துக்கு முரணானது” என்று பதிவிட்டுள்ளார். மேலும், பல ஆஸ்திரேலிய ரசிகர்களும், இந்திய அணியைக் கிண்டல் செய்து வெளியிட்ட செய்திக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு பயணத்தில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்னமாகத் திகழ்ந்தார். ஏறக்குறைய 593 ரன்கள் குவித்து, சராசரியாக 59 ரன்கள் வைத்திருந்தார். ஆதலால், இந்த முறை பயணத்தில் தொடக்கத்திலேயே கோலியின் மனவலிமையை உடைக்கும் நோக்கில் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY