‘ரோஹித் சர்மா அணியில் இல்லாவிட்டால், ஆஸியை. ஆதரிப்பேன்’: போலி ட்வீட்டால் ஹர்பஜன் ஆத்திரம்

3
ரோஹித்

“ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணியில் இடம் அளிக்காவிட்டால், தான் ஆஸ்திரேலிய அணியை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிப்பேன்” என்று ஹர்பஜன் சிங் கூறியதாக வெளியாகிய போலி ட்வீட்டுக்கு அவர் கடும் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு எதிரான போட்டிக்குப் பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதேசமயம் ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு அணிகளில் இடம் பெற்று விளையாடிய ஹர்பஜன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளார்.இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து ஹர்பஜன் சிங் கூறியது போல் விஷமிகள் சிலர், ட்விட்டரில் போலியாகக் கருத்துகளை உருவாக்கியுள்ளனர். அதில், “ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாவிட்டால், நான் கண்ணை மூடிக்கொண்டு ஆஸ்திரேலிய அணியைத்தான் ஆதரிப்பேன்” என்று ஹர்பஜன் சிங் கூறியதுபோல் ரோஹித் சர்மா புகைப்படத்தை வைத்து ட்விட்டரில் சிலர் வதந்தியைப் பரப்பிவிட்டனர். இது சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது.

போலியாக உருவாக்கப்பட்டு ட்விட்டரில் வலம் வரும் செய்தி : படம் உதவி ட்விட்டர்

 

இந்தப் போலியான ட்விட்டர் செய்தி ஹர்பஜனுக்கு தெரியவந்ததையடுத்து, அவர் மிகுந்த கோபமும், வேதனையும் அடைந்தார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், “ என்னைப் பற்றியும், நான் கூறியதாக வரும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் போலியானவை. யார் இப்படி போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள் என எனக்குத் தெரியாது. நான் கூறியதுபோல் இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துகளை எப்படிப் பதிவிடுகிறார்கள். அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். இந்தியாவைச் சேர்ந்து ஆதரிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

வரும் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11பேர் கொண்ட இந்தியஅணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. பிரித்வி ஷா காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் தொடக்க ஆட்டக்காரராக கே.எல் ராகுலுடன் சேர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மா சிறந்த வீரர். அல்லது ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக முரளி விஜய் சேர்க்கப்படுகிறாரா என்பதும் தெரியாது.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்குப் பின், அணியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சேர்க்கப்படவில்லை. இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார்.

LEAVE A REPLY