2.0 – திரை விமர்சனம்

9
திரை

சென்னையில் உள்ள அனைவரது செல்போன்களும் திடீரென காற்றில் பறந்துபோய் மாயமாகின்றன. காரணம் தெரியாமல் அரசு குழம்புகிறது. முதல்வர் கூட்டும் அவசர கூட்டத்தில் விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) கலந்து கொள்கிறார். இதற்கிடையில், செல்போன் நெட்வொர்க் உரிமையாளர், செல்போன் விற்பனையாளர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆகியோர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.

இதற்கும் செல்போன்களே காரணமாகின்றன. இதை கண்டுபிடிப்பதற்காக, தடை செய்யப்பட்ட தனது ‘சிட்டி’ ரோபோவை (ரஜினிகாந்த்) மீண்டும் உயிர்ப்பிக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார் வசீகரன். அரசும் அனுமதிக்கிறது. அதன் பிறகு, சிட்டி, வசீகரன், அவரால் உருவாக்கப்பட்ட பெண் ரோபோ நிலா (எமி ஜாக்சன்) மூவரும் சேர்ந்து, இச்சம்பவங்களுக்கு பறவையியலாளர் பட்சிராஜன்தான் (அக்சய் குமார்) காரணம் என்று கண்டறிகின்றனர். அவர் ஏன் அப்படி செய்தார்? அவரிடம் இருந்து மக்களை ‘சிட்டி’ காப்பாற்றியதா என்பது மீதிக் கதை.

3டி தொழில்நுட்பத்தில் தமிழில் இப்படி ஒரு படமா? என விழிகளை விரிய வைத் துள்ளார் இயக்குநர் ஷங்கர். செல்போன் களால் மனிதர்கள் கொல்லப்படுவது, பல்லாயிரக்கணக்கான செல்போன்கள் இணைந்து ஒரு ராட்சசப் பறவை உருவா வது, செல்போன் பறப்பது, புயலாகக் கிளம்புவது, சூறாவளியாவது, பாம்பைப் போல ஊர்வது, சாலை முழுக்கப் பரவி நிற்பது ஆகிய காட்சிகள் திரையில் மிகப் பிரம்மாண்டமாக விரிகின்றன.

விஞ்ஞானி வசீகரன், சிட்டி 1.0, சிட்டி 2.0, குட்டி 3.0 என்று நான்குவித தோற்றங்களில் வசீகரிக்கிறார் ரஜினி. ‘இந்த நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு, எப்பவும் நான்தான் நம்பர் ஒன்’, ‘ஓடிப்போறது என் சாஃப்ட்வேர்லயே கிடையாது’ என்று சிட்டி ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் வசனம் பேசி அப்ளாஸ் அள்ளுகிறார். குட்டி 3.0 ஆக குழந்தைக்கே உரிய குதூகலத்துடன் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்து ஆச்சரியப்படுத்துகிறார்.

பட்சிராஜனாக பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார் அக்சய் குமார். வேதனை வடுக்களை சுமந்தபடி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர், அதற்குப் பிறகு வெடிப்பது வேற லெவல்.

எமி ஜாக்சன் கதாநாயகிக்கான பங்களிப்பை நிறைவாகச் செய்கிறார். ‘வட போச்சே’, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல’, ‘காதலுக்கு மரியாதை’ என்று அவர் அடிக்கும் டைமிங் பஞ்ச்கள், தியேட்டரில் கலகலப்பூட்டுகின்றன.

அமைச்சர்களாக வரும் கலாபவன் ஷாஜோன், அடில் ஹுசேன், அமைச்சர் பி.ஏ.வாக வரும் மயில்சாமி, விஞ்ஞானி போராவின் மகனாக வரும் சுதான்ஷு பாண்டே, செல்போன் கடை முதலாளியாக வரும் ஐசரி கணேஷ் ஆகியோர் கவனிக்க வைக்கின்றனர்.

செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கத்தால் பறவைகள் உயிரிழப்பது, அதனால் மனிதகுலத்துக்கு விளைய இருக்கும் ஆபத்து என வழக்கம்போல, சமூக அக்கறை சார்ந்த ஒரு விஷயத்தை மையமாக வைத்து கதை உருவாக்கியிருக்கிறார் ஷங்கர். அதேசமயம், உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த படம் தவறிவிடுகிறது. படத்தின் மையக் கருத்தான பறவைகள் பாதுகாப்புக்காக போராடுபவரை கொடூர மான கொலைகாரனாக சித்தரித்துள்ளதால், அவரை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற் படுகிறது.

பறவைகள் பற்றி நம்மாழ்வார் பாடியதை பட்சிராஜன் மேற்கோள் காட்டுவது உள்ளிட்ட சில இடங்களில் ஜெயமோகனின் வசனப் பங்களிப்பு பளிச்சிடுகிறது. கூடவே ஷங்கரின் வசனங்களும், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கார்க்கியின் வசனங்களும் படத்துக்குப் பலம் சேர்க் கின்றன.

படம் முழுக்க நீரவ் ஷாவின் கேமரா ஜாலம் செய்கிறது. ஆன்டனியின் எடிட்டிங், ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் எடிட்டிங் நேர்த்தி. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வசீகரனின் விஞ்ஞானக் கூடம், பட்சிராஜனின் பறவைகள் சூழ்ந்த வீடு, செல்போன் குவியல் ஆகியவற்றில் கலை இயக்குநர் முத்துராஜின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

கண்ணை உறுத்தாத துல்லியமான விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் முப்பரி மாணம் தரும் சிறந்த காட்சி அனுபவமும், ‘சிட்டி’ ரஜினியின் ரசிக்கத்தக்க சேட்டைகளும் மனதை கொள்ளை கொள்கின்றன.

LEAVE A REPLY