அய்யாக்கண்ணுக்கு எதிரான ஸ்டாலின் அறிக்கை வரவேற்க தக்கது ! நடுநிலை.காம் – தலையங்கம்

30

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வந்ததும் அய்யாக்கண்ணுவை ஏகபோகமாக ஆதரித்தார்கள் விவசாயிகளும் அரசுக்கு எதிரான அரசியக் கட்சியினரும். அவரின் வித்தியாசமான போராட்டங்களை கண்டு உண்மையில் அதிர்ந்தே போனார்கள் ஆளும் கட்சியினரும் அரசியல்வாதிகளும்.  அவர் நிர்வாண போராட்டம் நடத்திய பிறகு, நாட்டு மக்களில் அநேகர் அவர் மீது அதிருப்தி ஆனார்கள்.

அதன் பிறகு மக்களிடம் மதிப்பிழந்த அய்யாக்கண்ணு, சிறிது காலம் அமைதியானார். இடைவேளைக்கு பிறகு டெல்லியில் 30.11.2018 அன்று நடந்த விவசாயிகளின் பேரணியில் கலந்து கொள்ள அய்யாக்கண்ணுக்கு வாய்ப்பு கிடைத்தது.

தனது சகாக்களோடு அங்கு சென்ற அய்யாக்கண்ணு, லட்சக்கணக்கான மற்ற மாநில விவசாயிகள் நாகரீகமான முறையில் பேரணியில் ஈடுப்பட்டிருந்த போது பழைய குருடி கதவை திறடி என்பதுபோல் விளம்பர போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டார். அதாவது மற்ற விவசாயிகள் மத்தியில் இவரின் டீமை சேர்ந்த பத்துபேர் அதிரடியாக நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டனர்.

மற்றமாநில விவசாயிகள் தடுத்தும் கேட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் நடவடிக்கையை பார்த்து மற்ற மாநில விவசாயிகள் வெட்கித் தலை குணிந்தனர். விளம்பரம் ஒன்றே குறிக்கோளாக கொண்ட அய்யாக்கண்ணு, யாரையும் பொருட்படுத்தாமல் செய்த காரியத்தால் அந்த இடத்தில் தமிழர்களின் மானம் கப்பல் ஏறியது.

ஏற்கனவேஇவர்கள் டெல்லியில் நடத்திய போராட்ட கூத்தால் டெல்லில் மட்டுமில்லாமல் வடமாநிலங்களில் தமிழர்கள் குறித்த பார்வை சற்று வித்தியாசமாகத்தான் இருந்து வருகிறது. இந்தநிலையில் அய்யாக்கண்ணு டீம் செய்த காரியத்தால் தமிழர்கள் என்றாலே இப்படித்தானோ? என்று மற்றவர்கள் தவறாக யோசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அய்யாக்கண்ணு மட்டுமல்ல நாட்டிலுள்ள அத்தனை பேருக்குமே உரிமைகளுக்காக போராட உரிமை இருக்கவே செய்கிறது. அதை யாரும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் போராட உரிமை இருக்கிறது என்பதற்காக பண்பாட்டையும் மாண்பையும் கெடுக்கு ம் வகையிலான போராட்டம் கூடாது. அது நல்லது அல்ல.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழகத்தின் பிரதான எதிர்கட்சித்தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின், கருத்து தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

’’விவசாயிகளின் கடன் தள்ளுபடி, வேளாண்மை பொருட்களுக்கு கட்டுப்படி ஆக கூடிய நியாயமான விலை உள்ளிட்ட எந்த கோரிக்கையும் முறையாக பரீசீலனை செய்து பிடிவாதமாக நிறைவேற்ற மறுத்து பல முறை நடந்த அறவழி அமைதி போராட்டங்களையும் துளியும் மதிக்காமல் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசும் பிரதமர் மோடியும் இந்த நான்கு ஆண்டு காலமாக பாராமுகமாக நடந்து அலட்சிய படுத்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குறியது.

நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், தலைநகர் டெல்லியில் கூடி போராட்டங்களையும் மாபெறும் பேரணியையும் நடத்தியிருப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசின் ஆணவபோக்குதான் காரணம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

விவசாயிகளின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திம் மத்திய மாநில அரசுகளின் போக்கு கண்டனத்துக்குறியது. என்கிற போதிலும் விவசாயிகள் தங்கள் அறவழி போராட்டங்களை அமைதியாகவும் நாகரீகமாகவும் நமது பண்பாட்டுக்கு எவ்வித குறையும் ஏற்பட்டு விடாமலும் நடத்திட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

தமிழ்நாட்டின் பாரம்பரிய சீர்மிகு பண்புகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தமிழக மக்கள் முகம் சுழிக்கும் வகையிலும் நடைபெறும் நிர்வாணப்போராட்டங்களையும் தி.மு.க சார்பில் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவோ ஆதரிக்கவோ இயலாது.

ஆகவே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு இதுபோன்ற நிர்வாணப்போராட்டங்களை தயவு செய்து தமிழகத்தின் மாண்பையும் மதிப்பையும் மேலும் போற்றிப்பாதுகாக்கும் வகையில் ஜனநாயக ரீதியாக நாகரீகமான அறவழி அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயிகளின் ஒட்டு மொத்த வேதனை குரலை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ -இவ்வாறு ஸ்டாலில்ன் கூறியிருக்கிறார். இந்த அறிக்கையை நடுநிலை.காம் வரவேற்கிறது.

இனிமேலாவது உரிமைகளுக்காக போராடுகிறோம் என்கிற பெயரில் விநோத போராட்டங்களை போராடுவோர் தவிர்க்க வேண்டும். விளம்பரத்துக்காக சிலர் செய்யும் இந்த காரியம், எதிர்காலத்திற்கு தவறான வழிகாட்டலாக அமைந்துவிட கூடாது என்பதே எமது கருத்தும் ! -நடுநிலை.காம்

LEAVE A REPLY