அஜித்தைப் பார்க்க நள்ளிரவில் திரண்ட ரசிகர்கள்; தடியடி நடத்திய போலீசார்

5
அஜித்

நள்ளிரவில் சென்னை விமானநிலையத்தில் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் முட்டித்தள்ளியதால் போலீசார் லேசாக தடியடி நடத்தி, அஜித்தை காருக்கு அருகில் அழைத்து வருவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.

‘விஸ்வாசம்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, அடுத்து வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதனிடையே, ஆளில்லா விமானங்களை இயக்குவது தொடர்பான ஆலோசனைகள், அது தொடர்பான பயணத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக எம்.ஐ.டி. கல்லூரியில், ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி ஆலோகராக அஜித் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டரை இயக்குவது எப்படி என்பதையெல்லாம் அறிந்துகொள்வதற்காக, அஜித் ஜெர்மன் நாட்டுக்குச் சென்றிருந்தார். பயணத்தை முடித்துவிட்டு, நேற்று (நவம்பர் 30) நள்ளிரவில் சென்னை விமானநிலையத்தில் இறங்கினார்.

இதை அறிந்த அஜித் ரசிகர்கள் பெருமளவில் அங்கே கூடிவிட்டனர். மேலும் மற்ற விமானங்களில் ஏறுவதற்குக் காத்திருந்தவர்கள், பயணிகளை வழியனுப்புவதற்காக வந்தவர்கள், விமானநிலைய ஊழியர்கள் என ஏராளமானோர் அஜித்தைப் பார்த்ததும் உற்சாகத்துடன் அவரை நெருங்கி, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள சூழ்ந்தார்கள்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைக் கண்ட விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, கூட்டத்தை விலக்கப் போராடினார்கள். ஒருகட்டத்தில் அஜித்தை மீண்டும் விமான நிலையத்திற்குள்ளேயே அழைத்துச் செல்லும்படியான நிலை ஏற்பட்டது. ஆனாலும் ரசிகர்கள் விமான நிலையத்துக்குள்ளேயே நுழைந்தனர்.

அதன் பிறகு சிறிதுநேரம் கழித்து, வேறொரு பாதை வழியாக அஜித்தை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்தார்கள். அங்கேயும் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். ‘தல தல’ என்று உற்சாகக் குரல் எழுப்பினார்கள்.

பெருங்கூட்டத்துக்கு மத்தியில் அவரை காருக்கு அழைத்து வருவதற்கு போலீசார் சிரமப்பட்டார்கள். ஒருகட்டத்தில் வேறுவழியில்லாமல், லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஒருவழியாக அஜித்தையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.

நள்ளிரவில் அஜித் வருவதை அவருடைய ரசிகர்கள் எப்படி அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று விமான நிலைய ஊழியர்களும் போலீசாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

LEAVE A REPLY