டிச.4-ல் திருச்சியில் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் பேட்டி

10
திருச்சி

டிச.4 அன்று பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதற்குப் பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசு அனுமதி தந்திருப்பதை கண்டிக்கின்ற வகையில், அந்த நடவடிக்கையை எப்படி அணுகுவது என்பது பற்றி கலந்து பேசுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்றைக்கு நாங்கள் கூட்டினோம்.

இந்தக் கூட்டம் 24 மணி நேரத்திற்குள் கூட்டப்பட்ட கூட்டம். எனவே, ஏற்கெனவே ஒத்த கருத்துடைய கட்சிகளை அணுகி இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கலந்து பேசிய நேரத்தில் உடனடியாக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. மற்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை என்ற ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

எனவே, மற்ற கட்சிகளை எல்லாம் அழைக்கக்கூடிய அளவிற்கு இப்பொழுது இருக்கக்கூடிய நேரம் போதாத காரணத்தினால் நாங்கள் அழைக்க முடியாத நிலையில் ஏற்கெனவே ஒருங்கிணைந்து பல்வேறு நிலைகளில் ஒன்று சேர்ந்து போராட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய கட்சிகளோடு சேர்ந்து இன்றைக்கு இந்தக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இந்தக் கூட்டத்தினுடைய தொடக்கத்தில் அண்மையில் கஜா புயலினால் உயிரிழந்த தோழர்களுக்கு, விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று எங்களுடைய அஞ்சலியை நாங்கள் செலுத்தி இருக்கிறோம்.

அதைத் தொடர்ந்து, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உடனடியாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை, மாநில அரசு கூட்டி ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகின்ற டிசம்பர் மாதம் 4-ம் தேதி திருச்சி மாநகரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கக்கூடிய வகையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

நியாயமாக இந்த ஆர்ப்பாட்டத்தை டெல்டா பகுதியில் தான் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் டெல்டா பகுதியில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். எனவேதான் திருச்சியை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். அந்த திருச்சியும் டெல்டாவுக்குள் வருகிறது.

எனவே, திருச்சியிலே ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம் . அங்கே நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி பேதங்களை மறந்து, கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும். அந்த டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்களும் குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி தலைவர்களும் திருச்சியிலே பங்கேற்கிறார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின்,  ’’ஒரே இடம் தான். முதற்கட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறோம். அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிலே பங்கேற்க இருக்கிறார்கள்’’ என்றார்.

பிற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ’’அரசியலை மறந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இப்பொழுது உங்கள் மூலமாகவே அவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்’’ என்றார்.

LEAVE A REPLY