வளசரவாக்கத்தில் நடிகை தற்கொலை: பட வாய்ப்புகள் குறைந்ததால் விபரீத முடிவு

3
நடிகை

சினிமா நடிகை ஒருவர் தனது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாகத் தொங்கினார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் வசித்தவர் ரியாமிகா (26). ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரியாமிகா, பொறியியல் பட்டம் படித்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்த அவர் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’, ‘எக்ஸ் வீடியோஸ்’, ‘அகோரி’ ஆகிய படங்களில்  நடித்தார்.

ரியாமிகாவுக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். ரியாமிகாவின் ஒன்றுவிட்ட சகோதரர் பிரகாஷ் என்பவர் சினிமா துணை இயக்குநராக உள்ளார். சென்னையில் அவருடன் தங்கி ரியாமிகா வாய்ப்புகள் தேடி வந்தார்.

ரியாமிகாவின் காதலர் தினேஷ் ஜிம் பயிற்சியாளராக உள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர். மூன்று படங்களுக்குப் பின்னர் தொடர்ச்சியாக படவாய்ப்பு இல்லாத காரணத்தால் சிறிது காலமாக ரியாமிகா மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மன அழுத்தத்தில் இருந்த அவர் தனது காதலன் தினேஷை வீட்டுக்கு அழைத்தார். ஆனால், அவர் வரவில்லை. காலையில் சகோதரர் பிரகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று காலையில் தினேஷ் வீட்டுக்கு வந்தார்.

அப்போது தினேஷ், ரியாமிகாவுடன் பேசாமல் பிரகாஷுடன் பேசிக்கொண்டிருந்தார். இதனால் கோபமான ரியாமிகா படுக்கை அறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டார். வழக்கமாக நடக்கும் விஷயம்தான் அது என்பதால் பிரகாஷும், தினேஷும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருவரும் சமையல் செய்த பின்னர் ரியாமிகாவை அழைத்தனர்.

வெகுநேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் ரியாமிகா தொங்கியுள்ளார். இதை அடுத்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வளசரவாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சமபவ இடத்திற்கு வந்த போலீஸார் கதவை உடைத்து ரியாமிகா உடலைப் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியாமிகா மன உளைச்சலில் இருந்ததாக தினேஷும், பிரகாஷும் தெரிவித்துள்ளனர். படவாய்ப்புகள் இல்லாததால் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ரியாமிகா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

LEAVE A REPLY