‘உங்கள் ரசிகர்களை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’: ரஜினிக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

5
இனி

கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை ரசிகர்கள் வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைக்காததற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

 

“ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை இரத்ததான முகாம், உடல் உறுப்பு தானம், கண்தானம், மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட தனது ரசிகர்களுக்கும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்”. என கோரிக்கை வைத்திருந்தோம்.

கடந்த 2016-ம் ஆண்டு “கபாலி” திரைப்படம் வெளியான போதும், 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் “காலா” திரைப்படம் வெளியான போதும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகிகளின் கவனத்திற்கும் கோரிக்கையாகக் கொண்டு சென்றோம்.  ஆனால் எங்களது கோரிக்கைகள் குறித்து குறைந்தபட்ச அளவில்கூட பரிசீலிக்க  அவர்கள் முன்வரவில்லை.

இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள “2.O” திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால் எங்களது சங்கத்தின் கோரிக்கையை 3-வது முறையாக மீண்டும் கடந்த நவ.19 அன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் “அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற” நிர்வாகி வி.எம்.சுதாகர் ஆகியோருக்கு பதிவு தபால் வாயிலாக ஒப்புகை சீட்டுடன் அனுப்பியிருந்தோம்.

அந்த பதிவு தபாலினை கடந்த 22-ம் தேதி அன்று இருவர் தரப்பிலும் பெறப்பட்டதற்கான ஆதாரமாக ஒப்புகைச் சீட்டு எங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. நாங்கள் 3வது முறையாக மீண்டும் அனுப்பிய கோரிக்கையை பெற்று சுமார் ஒரு வாரகாலம் ஆன பின்னரும் இன்றைய தேதி வரை ரஜினி வாய் திறக்காதது வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் புதியதாக அரசியல் கட்சி துவங்கி புரட்சி செய்ய போவதாக கூறும் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விசயங்களில் வாய் மூடி மெளனம் காப்பது போல உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட கண்டிப்பான உத்தரவை இட வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை வழக்கம் போல் மெளனமாக கடந்து புறக்கணித்து செல்கிறார்.

இதைப் பார்க்கையில் கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லாத, தனது ரசிகர்களை நல்வழிப்படுத்த எண்ணாத நடிகர் “ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்களை இனிமேல் அந்த ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது” என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

குறைந்தபட்சம் தனது ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட வைக்க முன் வராத இவர் தமிழக அரசியலில் நுழைந்து மாற்றத்தை கொண்டு வருவேன் என்பது, அவரது ரசிகர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி தனது திரைப்படங்களை ஓட வைத்து அதன் மூலம் கோடிகளை குவிக்கும் யுக்தி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.”

இவ்வாறு பால் முகவர் சங்கத்தினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY