தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு

4
முன்னெச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களாக கஜா புயல் சேதங்களைப் பார்வையிட்ட மத்திய குழுவினர் ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினர். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு, புயல் சேத அறிக்கையை இன்னும் ஒருவார காலத்துக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

கடந்த 15-ம் தேதி நள்ளிரவில் வீசிய கஜா புயலால் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. புயலின் தாக்கத்தால் 63 பேர் உயிரிழந்தனர்.

வீடுகள், பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்தன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. இதர பாதிப்புகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கடந்த 22-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்புகளை விளக்கினார். தற்காலிக சீரமைப்புக்கு ரூ.1,431 கோடி, நிரந்தர சீரமைப்புக்கு ரூ.14,910 கோடி வழங்க வேண்டும். மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, மத்திய உள்துறை இணை செயலர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், மத்திய நிதித் துறை செலவினப் பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், ஹைதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் துறை பொறுப்பு இயக்குநர் பி.கே.ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சித் துறை துணை செயலர் மாணிக் சந்திரா பண்டிட், டெல்லியில் உள்ள எரிசக்தி துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், சென்னையில் உள்ள மத்திய நீர்வளத் துறை இயக்குநர் ஜெ.ஹர்ஷா, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து துறை செயற்பொறியாளர் ஆர்.இளவரசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் கடந்த 23-ம் தேதி இரவு சென்னை வந்தனர். 24-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு, திருச்சி சென்றனர். பிற்பகலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். 25-ம் தேதி திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். அப்போது, புயலின் தாக்கத்தைப் பார்த்து மத்திய குழுவினரே வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

26-ம் தேதி நாகை மற்றும் புதுச்சேரியின் காரைக்காலில் ஆய்வு நடத்தினர். இரவு புதுச்சேரியில் தங்கிய அவர்கள், நேற்று காலை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்னை திரும்பினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை பிற்பகல் 2.45 மணி அளவில் சந்தித்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை செயலர் கே.சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். புயல் பாதிப்புகள், அதுதொடர்பான ஆய்வுகள் குறித்து, விளக்கப் படங்களுடன் கே.சத்யகோபால் விளக்கினார். மாலை 3.10 மணிக்கு கூட்டம் முடிந்தது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு கூறியதாவது:

தமிழகத்தில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தோம். புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு சென்றோம். திண்டுக்கல் மாவட்ட பாதிப்பு அறிக்கையையும் கவனத்தில் எடுத்துக்கொண்டோம். நேரம் இல்லாததால் அங்கு நேரில் செல்ல முடியவில்லை.

அதிக உயிரிழப்புகள், மிகக் கடுமையான பாதிப்புகள், சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலி, வேதனையை எங்களால் உணரமுடிகிறது. தென்னை, மா, பலா உட்பட பல்வேறு வகையான மரங்கள், மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் கடல் நீர் புகுந்து சேறாக மாறியுள்ளது. வீடுகள், குடிசைகள் மட்டுமல்லாது, கான்கிரீட் கிடங்குகளையும் புயல் விட்டுவைக்கவில்லை. புயலின் வேகம், பலம், தீவிரத்துக்கு இந்த பாதிப்புகளே சாட்சி.

தமிழக அரசுக்கு பாராட்டு

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் அதிக அளவில் தடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்கு உரியது. புயல் தாக்கிய இடங்களில் உள்கட்டமைப்புகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. மின்கம்பங்கள், சாலைகள், வீடுகள் பலத்த சேதம் அடைந்த நிலையில், அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, அடிப்படை வசதிகளை சீரமைப்பதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இழப்புகள் மதிப்பீடு

மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து, பாதிப்புகள், இழப்புகளை கணித்துள்ளோம். எங்களது சேத மதிப்பீட்டுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்படும். புயல் ஏற்படுத்திய இழப்புகளுக்காக வழங்கப்படும் நிவாரணங்களால், தமிழக மக்கள் இனியும் இதுபோன்ற வலிகளுடன் கஷ்டப்படத் தேவை இருக்காது என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் ஆலோசனை

முன்னதாக, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் நேற்று காலை ஆலோசனை நடத்தினர். அப்போது, காரைக்கால் பாதிப்புக்கு மத்திய அரசிடம் ரூ.187 கோடி கோரியுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

புதுச்சேரி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு, ‘‘எங்கள் ஆய்வுடன், அரசின் புள்ளி விவரங்களையும் ஆய்வு செய்ய உள்ளோம். முழு அறிக்கையை ஒரு வாரத்துக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY