வசூல் சாதனைகள் படைக்கும் ‘சர்கார்’: ரஜினியை முந்துகிறாரா விஜய்?

3
சர்கார்

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக தீபாவளியன்று வெளியான ‘சர்கார்’ திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. சர்வதேச அளவில், வெளியான 6 நாட்களில் இந்த வசூலை ‘சர்கார்’ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை, ‘எந்திரன்’, ‘ஐ’, ‘பாகுபலி 1’, ‘கபாலி’, ‘மெர்சல்’, ‘பாகுபலி 2’, ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 200 கோடி ரூபாய் வசூலை எட்டும் எட்டாவது திரைப்படம் ‘சர்கார்’.

ரஜினிகாந்த், பிரபாஸ், தற்போது விஜய் என இந்த மூன்று நடிகர்களின் தலா 2 படங்கள் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளன.

217.13 கோடி ரூபாய் வசூலுடன், 2018-ம் வருடம் அதிகம் வசூல் செய்துள்ள தென்னிந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் ‘சர்கார்’ பிடித்துள்ளது. ராம் சரண் நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ வசூலித்த 215.7 கோடி ரூபாய் என்ற இலக்கை ‘சர்கார்’ தாண்டிவிட்டது.

தேசிய அளவிலான வசூலில் ‘பத்மாவத்’, ‘சஞ்சு’, ‘ரேஸ் 3’, ‘பாகி 2’, ‘ஹிச்கி’, ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 7-வது இடத்தைப் பிடித்துள்ளது ‘சர்கார்’.

தமிழ்நாடு வசூல்

தமிழகத்தில் மட்டும் ‘சர்கார்’ எட்டு நாட்களில் 108 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. ‘பாகுபலி 2’, ‘மெர்சல்’ படங்களுக்கு அடுத்து தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களில் ‘சர்கார்’ மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் கூடுதலாக இன்னும் 40 கோடி ரூபாய் வசூலைக் கூடுதலாகப் பெற்றால் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபகரமான படமாக ‘சர்கார்’ இருக்கும்.

சென்னையிலும் சாதனை

சென்னையைப் பொறுத்தவரை, ‘சர்கார்’ எட்டு நாட்களில் 11.61 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ‘பாகுபலி 1’, ‘மெர்சல்’, ‘கபாலி’ படங்களின் வரிசையில் அதிகம் வசூலித்த நான்காவது படமாக ‘சர்கார்’ உள்ளது.

ஆந்திராவில் ஆச்சரியம், கேரளாவில் அதிர்ச்சி

தமிழகத்தைத் தாண்டி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விஜய்யின் படங்களுக்கு எப்போதும் மவுசு இருக்கும். ஆனால், தெலுங்கில் விஜய் படங்கள் பெரிதாக வெற்றி பெற்றதில்லை. ‘சர்கார்’, அதையும் மாற்றியுள்ளது.

ஆறு நாட்களில் 16.3 கோடி ரூபாய் வசூலித்து, விநியோகஸ்தர்கள் பங்காக 7.95 கோடி ரூபாயைப் பெற்றுத் தந்துள்ளது. தெலுங்குப் பதிப்பைப் பொறுத்தவரை, ‘சர்கார்’ இப்போதே லாபகரமான படமாக மாறியுள்ளது.

தமிழகத்துக்கு அடுத்து விஜய்யின் கோட்டை என நினைக்கப்படும் கேரளாவில், முதல் நாள் வசூலைத் தாண்டி ‘சர்கார்’ ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. ‘பாகுபலி 2’ முதல் நாள் வசூல் சாதனையை ‘சர்கார்’ முறியடித்தாலும், இதுவரை 13 கோடி ரூபாய் வசூலை மட்டுமே ‘சர்கார்’ பெற்றுள்ளது. மொத்தமாக 20 கோடி ரூபாய் வசூலைப் பெற்றால் மட்டுமே முதலீடு செய்த பணம் திரும்ப வரும் நிலைக்கு ‘சர்கார்’ மாறும். ஆனால், அங்கு வரவேற்பு சுமாராகவே இருப்பதால், கேரளாவைப் பொறுத்தவரை ‘சர்கார்’ நஷ்டமாகவே அதிக வாய்ப்புள்ளது.

ரஜினி வரிசையில் விஜய்

தற்போது ‘மெர்சல்’, ‘சர்கார்’ எனத் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய இரண்டு படங்கள் விஜய் நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனையைப் படைத்துள்ள ஒரே தமிழ் நடிகரும் இவரே.

ரஜினியின் ‘எந்திரன்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களே சென்னையில் 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்கள். தற்போது விஜய்யின் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘சர்கார்’ ஆகிய மூன்று படங்களும் இதேபோல் 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன.

‘காலா’ படம் 10 கோடி ரூபாய் வசூலைத் தாண்ட பத்து நாட்கள் ஆனது. ஆனால், ‘சர்கார்’ இதை 6 நாட்களில் எட்டியுள்ளது. வெளிநாடுகளிலும், ரஜினிகாந்தின் ‘கபாலி’க்கு அடுத்து ‘சர்கார்’ வசூலே அதிகம் உள்ளது. ‘மெர்சல்’ படத்தின் மொத்த வசூலில் முக்கால்வாசிப் பங்கை, ‘சர்கார்’ முதல் வாரத்திலேயே எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய வசூல் நிலவரத்தின்படி, அதிகம் வசூல்செய்த தென்னிந்தியத் திரைப்படம் என்ற பட்டியலில் ஷங்கரின் ‘ஐ’ வசூலை ‘சர்கார்’ முந்தியுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 4 இடங்களில் ‘பாகுபலி 2’, ‘பாகுபலி 1’, ‘எந்திரன்’, ‘மெர்சல்’ ஆகிய படங்கள் உள்ளன.

LEAVE A REPLY