ஊழல் கரையான்களை ஒழிக்க பணமதிப்பிழப்பு எனும் கசப்பான மருத்து தரப்பட்டது

8
மோடி

ஊழல் எனும் கரையான்களை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு எனும் கசப்பான மருந்து கொடுக்கப்பட்டது என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் வரும 28-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஜாபுவா நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கரையான்களை ஒழிப்பதற்காகவே நாம் விஷத்தைப் பயன்படுத்துகிறோம். அதுபோல நாட்டில் ஊழல் எனும் கரையான்களை ஒழிப்பதற்காகவே பண மதிப்பிழப்பு எனும் கசப்பான மருந்து தரப்பட்டது.

மக்கள் தங்கள் வீடுகளில் தலையணை மற்றும் மெத்தைக்கு அடியிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் பணத்தை பதுக்கி இருந்தவர்கள், இன்று ஒவ்வொரு பணத்துக்கும் வரி செலுத்துகிறார்கள். அந்த பணத்தின் மூலம் நாம் சாமானிய மக்களுக்குத் திட்டங்களை வகுக்கிறோம்

மத்தியப் பிரதேச விவசாயிகள் காங்கிரஸ் கட்சியின் வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பிவிடக்கூடாது. அந்த வாக்குறுதிகள் பொய்யானது. இதேபோன்றுதான் கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சி வேளாண் கடன் தள்ளுபடி குறித்து வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, விவசாயிகளைச் சிறைக்கு அனுப்பியது.

கடந்த 2008-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி அறிவித்தது. ஆனால், அனைத்தும் வெற்றுவார்த்தையானது. ஆனால், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த என்னுடைய அரசு தீர்மானித்துள்ளது.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் எந்தவிதமான பிணைப் பத்திரம் ஏதுமிந்றி 14 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்த காரியத்தை காங்கிரஸ் கட்சிச செய்ய முயன்றால் 10 ஆண்டுகள் தேவைப்படும்.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தின் நிலை எப்படி இருந்தது. 55 ஆண்டுகள் ஆட்சியில் 1500 பள்ளிக்கூடங்கள் மட்டுமே காங்கிரஸ் அரசு கட்டியது. ஆனால், முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் வந்தபின் 15 ஆண்டுகளில் 4 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கட்டியுள்ளார்.

என்னுடைய கனவு அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பதுதான். வரும் 2022-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வீடுகள் அளிப்பதுதான் எனது நோக்கமாகும். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, அனைத்துப் பணிகளையும் மேடம் இடத்தில் கேட்டு செய்தது, ரிமேட் கன்ட்ரோல் ஆட்சி நடந்தது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

LEAVE A REPLY