ஜெ. வழக்கின் தீர்ப்பும்.. மாணவிகள் மரணமும்..

6
மாணவிகள்

கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவ, மாணவியர் 46 பேர் அடங்கிய குழு கல்விச் சுற்றுலாவுக்காக கடந்த 2000 பிப்ரவரி 1-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் வந்திருந்தனர். பல இடங்களைப் பார்வையிட்ட இந்த குழுவினர் பிப்ரவரி 2-ம் தேதி தருமபுரியை அடைந்தனர். ஒகேனக்கல் சென்ற பின்னர் சுற்றுலாவை நிறைவு செய்து கோவை திரும்புவது இவர்கள் திட்டம்.

ஆனால், அன்று ஜெயலலிதா தொடர்புடைய வழக்கில் அவருக்கு பாதகமான தீர்ப்பு வெளியாகி இருந்தது. இதனால், தருமபுரியில் ஆங்காங்கே கலவர சூழல் நிலவியது. எனவே, இவர்கள் ஒகேனக்கல் திட்டத்தை கைவிட்டு கோவைக்கு புறப்பட்டனர்.

தருமபுரி – சேலம் நெடுஞ்சாலையில் இலக்கியம்பட்டி அருகே அவர்களின் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில், அதிமுக-வினர் அடங்கிய கும்பல் வாகனங்களை மறித்தும் கல்வீசியும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வேளாண் பல்கலை பேருந்தை மறித்து தாக்கினர். பின்னர், திடீரென பேருந்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.

அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவி களும், ஆசிரியர்களும் பேருந்தின் முன்புற படிக்கட்டு, ஜன்னல் வழியாக வும், கண்ணாடிகளை உடைத்துக் கொண்டும் வெளியேறினர்.

ஆனால், ஹேமலதா (19), கோகில வாணி (19), காயத்ரி (19) ஆகிய 3 மாணவிகள் மட்டும் பேருந்துக்குள் சிக்கினர். வெளியில் நின்றவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்தபோதும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. 3 பேரும் கதறியபடி உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியில் 28 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு, நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘விடுதலை வேதனை அளிக்கிறது’

நாமக்கல்

உயிரிழந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறியதாவது:

நீதி, நேர்மை கெட்டுப் போய்விட்டது. ஒரு நீதிபதி தூக்கு தண்டனை விதிக்கிறார் மற்றொரு நீதிபதி ஆயுள் தண்டனை என்கிறார். அப்படியென்றால், முதல் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறா? கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டு செய்துவிட்டார்கள் என்று முதல்வர் கடிதம் எழுதுகிறார். அவருக்கு மனசாட்சி இல்லையா? மூவரையும் விடுவித்து ஆளுநர் உத்தரவு அளித்தது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து வழக்கு நடத்த என்னிடம் பணம் இல்லை.

‘நீதி தேவதைக்கு தலைகுனிவு’ 

விருத்தாசலம்

உயிரிழந்த மாணவி காயத்ரியின் தந்தை டி.வெங்கடேசன் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதன் காரணமாக, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டபோது, நீதி மரித்துப் போனது. இதன்மூலம் எரித்துக் கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளின் நிகழ்வு, சாதாரண ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. நீதி தேவதை தலை கவிழ்ந்து கண்ணீர் மல்க அழுவதாகத்தான் இதை கருதுகிறேன்.

LEAVE A REPLY