பாஜக வளர பொன்னான வாய்ப்பு: சர்ச்சையாகப் பேசிய கேரள பாஜக தலைவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

10
பாஜக

சபரிமலை விவகாரம் கேரளாவில் பாஜக வளர பொன்னான வாய்ப்பு என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். சிரீதரன் பிள்ளை மீது போலீஸார் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோழிக்கோடு பகுதியில் பாஜக இளைஞரணியின் மாநில கமிட்டியின் உள்ளரங்கக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் சிறீதரன் பிள்ளை பேசும்போது, “ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது, ஒருவேளை பெண்கள் வந்தால் நடையைச் சாத்தலாமா என்பது குறித்து தந்திரி என்னிடம் ஆலோசித்தார். குறிப்பாக, நடையைச் சாத்தினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?’’ எனக் கேட்டார்.

அதற்கு நான், “அப்படி நடந்தால் உங்களைத் தனியாக விட்டுவிட மாட்டோம். உங்கள் பின்னால் மக்கள் கூட்டம் இருக்கும்” என்றேன்.

நாம் முன்னரே திட்டமிட்டதுபோல் போராட்டம் செல்கிறது. நமது இளைஞர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு யாரையும் கோயிலுக்குள் விடவில்லை. இது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. நமது திட்டத்துக்குள் அனைவரும் வந்து விட்டனர். சபரிமலை பிரச்சினை பாஜக மாநிலத்தில் வளர்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு” என கேரள பாஜக தலைவர் பி.எஸ். சிரீதரன் பிள்ளை பேசியதாக ஒரு வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது. அது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

ஆனால், தனது கருத்து என்பது ஒரு வழக்கறிஞர் என்ற முறையில், கோயில் தந்திரிக்கு அளித்த ஆலோசனை என்று சிரீதரன் பிள்ளை மழுப்பலாகப் பதில் அளித்திருந்தார். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. கோயிலின் தந்திரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேவசம்போர்டு நிர்வாகிகள், பாஜக தலைவரிடம் கோயிலை மூட ஏன் அனுமதி கேட்டீர்கள் என்று விளக்கம் கேட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் பாஜக மாநிலத் தலைவர் சிரீதரன் பிள்ளை மீது கேரள போலீஸார் ஐபிசி 505 1(பி) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறீதரன் பிள்ளையின் கருத்து சமூகத்தில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY