‘சர்கார்’ சர்ச்சை; மதுரையைத் தொடர்ந்து சென்னையிலும் அதிமுகவினர் தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம்: பேனர்கள் கிழிப்பு

15
சர்கார்

‘சர்கார்’  படத்துக்கு எதிரான அதிமுகவினர் போராட்டம் மதுரை, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் பரவியது. தியேட்டர் முன் போராட்டம் நடத்திய அதிமுகவினர் பேனர்களைக் கிழித்தெறிந்தனர்.

‘சர்கார்’ படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை கொச்சைப்படுத்தும் விதமாக அதைத் தீயிட்டு எரிக்கும் காட்சிகளும், ஜெயலலிதாவின் இயற்பெயரை வில்லி கேரக்டருக்கு வைத்திருப்பதும் அதிமுகவினரை கோபத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து மேற்கண்ட காட்சிகளை நீக்கிவிட்டு திரையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் ராஜன் செல்லப்பா தலைமையில் அண்ணா நகர் சினிப்பிரியா தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோன்று கோவையில் சாந்தி திரையரங்கில் அதிமுக ஐடிவிங் சார்பில் திரண்ட அதிமுகவினர் பேனர்களை கிழித்தெறிந்தனர்.

இதேபோன்று சென்னையிலும் போராட்டம் பரவியது. சென்னை காசி தியேட்டர்முன் விருகை ரவி எம்.எல்.ஏ தலைமையில் திரண்ட அதிமுகவினர் பேனர்களைக் கிழித்தெறிந்து, தியேட்டர் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதேபோன்று எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரிலும், அண்ணாசாலை தேவி தியேட்டர், ராயப்பேட்டை உடல்ண்ட்ஸ் திரையரங்கிலும் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் ‘சர்கார்’ பட பேனர்களைக் கிழித்தெறிந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு தியேட்டர் முன் அதிமுகவினரும், விஜய் ரசிகர்களும் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடப்பதால் அண்ணாசாலை, ராயப்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காசி திரையரங்கும் முன் விருகை ரவி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

”மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தை ஜெயலலிதா வழங்கினார். அந்தத் திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அந்தப் பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவதாக காட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது. 6 முறை ஜெயலலிதாவும், 3 முறை எம்ஜிஆரும் தமிழகத்தை ஆண்டுள்ளனர். அவர்களுக்கு மக்களின் தேவை தெரியும். அதனால்தான் ஏழைகளுக்கான பல நல்ல திட்டங்களை எம்ஜிஆரும், அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் வழங்கியுள்ளனர்.

இன்றைக்கு மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நோட்டுப் புத்தகம், பாடப் புத்தகம், மடிக்கணினி , இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், சீருடை, காலுக்கு செருப்பு, அவர்கள் பெயரில் டெபாசிட் இப்படி எத்தனையோ நல்ல திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதையெல்லாம் கொச்சைப்படுத்தும் விதமாகப் படம் எடுத்துள்ளனர்.

நடிகர் விஜய்யைக் கேட்கிறேன். பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானால் நடிப்பீர்களா? ஜெயலலிதா நாட்டு மக்கள் மீது பற்று கொண்டவர். எம்ஜிஆர் அடித்தட்டு மக்களுடன் வாழ்ந்தவர். பல திட்டங்களைக் கொண்டுவந்தவர்.

நீங்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றால் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு ஜெயலலிதாவின் திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக படம் எடுக்கிறீர்கள். இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் விஜய் படத்தைப் பார்க்ககூடாது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் இதைவிடக் கொடுமை வேறு எதுவும் இல்லை.

இனி இதுபோன்ற படங்களில் விஜய் நடிக்கக்கூடாது என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மாறவேண்டும், திருந்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்”.

இவ்வாறு விருகை ரவி தெரிவித்தார்.

LEAVE A REPLY