‘சர்கார்’ சர்ச்சை; அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்: கமல் சாடல்

16
சர்கார்

அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும் என்று ‘சர்கார்’ சர்ச்சை குறித்து கமல் சாடியிருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சை, கதை சர்ச்சை ஆகியவற்றைக் கடந்து ஒருவழியாக தீபாவளியன்று திரைக்கு வந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், சன் டிவியில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தினார்கள்.

இப்படம் வெளியானவுடன் அதிமுகவினர் சில காட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மேலும், அக்காட்சிகளை நீக்காவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார் உள்ளிட்ட பலரும் ‘சர்கார்’படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ‘சர்கார்’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அதிமுகவினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கு வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் போஸ்டர்களைக் கிழித்து எறிந்தனர். இதனால் கடும் சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ‘சர்கார்’ சர்ச்சை தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முறையாக சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும்‘சர்கார்’படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப் போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY