திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது – வீடியோவுடன் முழுவிபரம்

164
திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக நேற்று துவங்கியது. ஆயிரக்கணகக்கான பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து விரதம் துவங்கினர்.

முருகப்பெருமான் படை வீடு கொண்டுள்ள அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு கடலோரத்தில் முருகப்பெருமான் கோயில் அமைந்திருப்பது தனிசிறப்பு. இக்கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

அதிகாலை 5.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் முதல் பிரகாரத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 7.30 மணிக்கு யாகசாலையில் பூஜைகள் துவங்கியது. கோயில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் செல்வராஜ், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோரிடம் சிவாச்சாரியார்கள் நிர்வாக அனுமதி பெறும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து சஷ்டி காப்பு கட்டிய முத்துகிருஷ்ணன் சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தது.

யாகசாலையில் சிவன், பார்வதி, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை பிரதான கும்பங்களும், பரிவார மூர்த்திகளின் கும்பங்கள் என 27 கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. மேலும் யாகசாலையில் சஷ்டி தகடுகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. யாகசாலையில் காலை 10.30 மணிக்கு பூர்ணாகுதி இடப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

பகல் 12 மணிக்கு மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. அப்போது வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மதியம் 1.40 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தார். அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை தங்கதேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்து கோயிலை சேர்ந்தார்.

கந்த சஷ்டி துவக்கத்தை முன்னிட்டு அதிகாலை விரதமிருக்கும் முருகபக்தர்கள் பச்சை நிற ஆடையணிந்து கடலிலும், நாழகிணற்றிலும் புனித நீராடி அங்கபிரதட்சணம் செய்து விரதம் துவங்கினர். இந்த பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் சஷ்டி மண்டபம், காவடி மண்டபம், கோயில் கலையரங்கம் பின்பகுதியில் தற்காலிக பந்தல், வசந்த மண்டபம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தனர்.

இந்த பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடி, முருக நாம ஜெபங்களை உச்சரித்து விரதம் இருந்து

வருகின்றனர். இதே போல் தனியார் லாட்ஜிகள், மண்டபங்கள், சமுதாய மண்டபங்கள் அனைத்து பகுதியிலும் பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். அதிகாலையிலிருந்து அவ்வப்போது மழை துளிகள் பெய்த போதும், அதனை பொருட்படுத்தாமல் அங்கபிரதட்சணம் செய்தனர். முருக பக்தர்ளின் விரத இருப்பதால் கோயில் வளாகம் கோலாகலமாக காட்சியளிக்கிறது.

கந்த சஷ்டி விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. விழா நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. ஆறு நாட்களும் யாகவேள்வி நடத்தப்பட்டு பூர்ணாகுதி நடக்கிறது. கந்த சஷ்டி விழாவின் பிரதான நிகழ்ச்சியான சூரசம்ஷாரம் விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. அன்றைதினம் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூபதீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹார விழா நடக்கிறது. தொடர்ந்து வரும் 14ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சி புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு தெப்பக்குளம் தெரு சந்திப்பில் தோள்மாலை மாற்று நிகழ்ச்சியும்,  நள்ளிரவு திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

சஷ்டி விழாவை முன்னிட்டு கோயில் கலையரங்கில் காலை மதல் இரவு பக்தி சொற்பொழிவுகள் நடக்கிறது.

பக்தர்கள பாதுகாப்பை முன்னிட்டு கடலில் மீன்வளத்துறை மூலம் தடுப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. திபு மேற்பார்வையில், கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, தாலுகா இன்ஸ்பெக்டர் ரகுராஜன் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

கோயிலில் கட்டணம் உயர்வு

*சஷ்டி விழாவை முன்னிட்டு விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூ.2 ஆயரம், அபிஷேக கட்டணம் ரூ.3 ஆயிரம், அபிஷேக வி.வி.ஐ.பி. கட்டணமாக ரூ.7 ஆயிரத்து 500ம் நேற்று கட்டணம் உயர்த்தப்பட்டது. இதே போல் யாகசாலையில் நுழைவு கட்டணமாக ரூ.3 ஆயிரம் பக்தர்களிடம் பெறப்பட்டது. கடந்த ஆண்டு விஸ்வரூ தரிசனம் கட்டணமாக ரூ.100ம் ஆபிஷேக கட்டணம் ரூ.200ம், வி.வி.ஐ.பி. அபிஷேக கட்டணமாக ரூ.800ம் வசூலிக்கப்பட்டது. இதனை தவிர சிறப்பு விரைவு தரிசனம் கட்டணமாக ரூ.250, விரைவு தரிசன கட்டணம் ரூ.100ம் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது.

 

* கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க 9 இடங்களில் தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொட்டகையிலும் 500 பக்தர்கள் வீதம் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

* கோயில் கிரி பிரகாரத்தில் மண்டபம் இடிந்து ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதனால் வெறிச்சோடி காணப்பட்ட பிரகாரத்தில் தற்போது இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டு  தகரத்தால் ஆன தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

* திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றுஅதிகாலையிலேயே மழை தூறிக்கொண்டு இருந்தது. காலை 10.30 மணிக்கு மேல் மழை கொட்டியது. சுமார் அரைமணிநேரம் மழை பெய்தது. மழை கொடடியதால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே விரதம் இருந்தனர்.

* கோயில் வளாகத்தில் பக்தர்கள் யாகசாலை பூஜை பார்ப்பதற்கு வசதியாக 20 இடங்களில் எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. கோயில் கடற்கரை

அருகே 10க்கு 8 என்ற அளவில் அகன்ற எல்.இ.டி. ஸ்கீரின் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன.

* வழக்கமாக கந்த சஷ்டி நிகழ்ச்சிகளை உள்ளூர் டி.வி.சேனல்கள் மூலம் ஒளிப்பரப்பபடுவது உண்டு. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே யாகசாலை பூஜைகள், பக்தி சொற்பொழிவுகள் ஆகிவற்றை பக்தர்கள் கண்டு களிப்பார்கள். இந்த முறை லோக்கல் சேனல் ஒளிப்பரப்பு செய்ய நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சஷ்டி நிகழ்ச்சிகளை லோக்கல் சேனல்கள் ஒளிப்பரப்ப மறுத்துவிட்டன. இதனால் பெரும்பாலான பக்தர்கள் சஷ்டி நிகழ்ச்சிகளை காண வாய்ப்பு இல்லாமல் போனது பக்தர்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியது.

* கோயில் கலையரங்கில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது,   உதாரணமாக ஒரு கருத்தை சொல்ல.  அப்போது அங்கு வந்த  இந்து முன்னணி அமைப்பின் மாநில து.தலைவரான வி.பி.ஜெயக்குமார், ‘இந்துக்கள் நிறைந்துள்ள இந்த கூட்டத்துக்குள் எதற்கு முஸ்லீம் குறித்த உதாரணத்தை சொல்றீங்க? . அவர்கள் நிகழ்ச்சியில் நம்ம மதம் குறித்த உதாரணத்தை சொல்வார்களா? ’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சொற்பொழிவாளர் வருத்தம் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY