நள்ளிரவில் மர்ம நபர்கள் மடையை திறந்தனர் : ஊருக்குள் வெள்ளம் புகுந்தது – தூத்துக்குடி அருகே சம்பவம் !

19

நள்ளிரவில் குளத்தின் மடையை திறந்துவிட்டத்தால் அருகிலுள்ள ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் பகுதியில் நீர் தேக்கம் மற்றும் குளம் இருக்கிறது. அந்த குளத்தில் தாமிரபரணி ஆற்று நீர் மற்றும் காட்டாற்று வெள்ள நீர் தேக்கி வைக்கப்படுவது வழக்கம். ஒரு காலத்தில் இங்கிருந்துதான் தூத்துக்குடி நகர பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

தற்போது அந்த குளம், விசாயம் மற்றும் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருகிறது. குளத்தின் அருகில் கோரம்பள்ளம், பொன்நகரம் பெரியநாயகிபுரம் உள்ளிட்ட ஊர்கள் இருக்கிறது.

இந்தநிலையில் நேற்று(05.11.2018) நள்ளிரவு மர்மநபர்கள் குளத்தில் உள்ள மடையை ஒன்றை திறந்துவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வெளியேறிய தண்ணீர், முறையான வடிகால் இல்லாத நிலையில் ஊருக்குள் குளத்து தண்ணீர் புகுந்தது.

விடிந்து பார்த்த போது பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தனர். பொதுமக்கள் அவர்களிடம், ‘’வடிகால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.

அதனால்தான் இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டது. உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல், நள்ளிரவில் மடையை திறந்துவிட்ட நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

’’மடையை வேறு யாரும் திறக்கமுடியாது. பொதுப்பணித்துறையை சேர்ந்தவர்களிடம்தான் அதற்கான சாவி இருக்கிறது’’ என்றார்கள் அங்கு நின்றவர்கள். இந்தநிலையில் அதிரடியாக வேலையில் இறங்கிய அதிகாரிகள், மடையை அடைத்து மட்டுமில்லாமல் மணல் மூடைகளைக் கொண்டு மடையை நன்றாக அடைத்தனர்.

இனி குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லை. என்றாலும் ஊரை சூழ்ந்திருக்கும் தண்ணீர் எப்படி வெளியேற்றுவது என அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY