கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

16
கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

விழாவின் 9-ம் நாளான கடந்த 1-ம் தேதி வணிக வைசிய சங்க மண்டகப்படி சார்பில் தேரோட்டம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, 5.30 திருவனந்தல் பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. 11 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

மாலை 6.30 மணிக்கு பூவனநாத சுவாமி, செண்பகவல்லி அம்பாள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, திருமண மண்டபத்துக்கு எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் நடந்தன. 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. பூஜைகளை செண்பகராம பட்டர், சங்கர பட்டர், சுவாமிநாத பட்டர், கோபாலகிருஷ்ணன் செய்தனர். தொடர்ந்து அம்பாள் பல்லக்கிலும், சுவாமி யானை வாகனத்திலும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மங்கல பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அ.பாலசுப்பிரமணிய ராஜன், உதவி ஆணையர் தி.சு.ரோஜாலி சுமதா, தலைமை எழுத்தர் ஆ.ராமலிங்கம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதே போல், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் நேற்று ஐப்பசி திருக்கல்யாண சிறப்பு விழா நடந்தது.இதனையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி விநாயகர், கல்யாண முருகன் மற்றும் சுவாமி, அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கொலு மண்டபத்தில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு திருமண வைபவ ஹோமம் பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது. பின்னர், சுவாமி அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 11 வகையான சீர்த்தட்டுகள் கோயில் வளாகத்தை சுற்றி வந்து, திருமண வைபவம் நடந்தது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், செண்பகவல்லி, கணேசன், ராஜேஸ்வரி, ராஜலட்சுமி செய்தனர்.

LEAVE A REPLY