‘கிங் கோலி’ இல்லாததால் டி20 உலக சாதனையை முறியடிக்க ரோ‘ஹிட்’ ஷர்மாவுக்கு வாய்ப்பு

22
கிங் கோலி

நாளை மே.இ.தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ஒரு ஆதிக்கச் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒருநாள் தொடரை இந்திய அணி அவ்வளவு சுலபமாக வென்று விடவில்லை, இன்னும் சொல்லப்போனால் ஓரளவுக்கு மே.இ.தீவுகளை இந்திய அணி மட்டமாகவே நினைத்தது, அதனால்தான் ஒரு போட்டியில் அதிர்ச்சித் தோல்வியும் ஒரு போட்டி டையும் ஆனது.

இந்நிலையில் மே.இ.தீவுகளின் சரவெடி பேட்டிங் கைகொடுக்கும் ஒரு சிறந்த வடிவம் டி20, இதில் இந்திய அணியும் சரவெடி காட்டும் என்பதில் ஐயமில்லை என்பதால் இது ஒரு விறுவிறுப்பான டி20 தொடராக இருக்கும் என்று நம்பலாம்.

 

இந்தத் தொடரில் விராட் கோலி இல்லாததால் டி20 உலக சாதனை ஒன்றை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டி20 சர்வதேச கிரிக்கெட்டில் மார்டின் கப்தில் 2271 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா தற்போது 2086 ரன்களுடன் 5ம் இடத்தில் உள்ளார். 4ம் இடத்தில் உள்ள விராட் கோலி 2102 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால் அவர் இல்லை என்பதால் மார்டின் கப்திலின் அதிக டி20 ரன்கள் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடிக்க இந்தத் தொடரில் வாய்க்குமா என்பதே சுவாரசியமாக உள்ளது.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் மார்டின் கப்தில் ஆடாததும் ரோஹித் சர்மாவுக்குச் சாதகமாகியுள்ளது.

டி20யில் அதிக ரன்கள்:

மார்டின் கப்தில் – 2271 ரன்கள்

ஷோயப் மாலிக் – 2161 ரன்கள்

பிரெண்டன் மெக்கல்லம்- 2140 ரன்கள்

விராட் கோலி – 2102 ரன்கள்

ரோஹித் சர்மா- 2086 ரன்கள்

இந்நிலையில் தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித் சர்மா 3 போட்டிகளில் 185 ரன்கள் அடிப்பது பெரிய விஷயமல்ல என்பதால் உலக சாதனை கண்களுக்குத் தெரிகிறது.

LEAVE A REPLY