சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா

12
சிவகார்த்திகேயன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சீம ராஜா’. சிவாவின் 12-வது படமான இதை, பொன்ராம் இயக்கினார். சமந்தா ஹீரோயினாக நடிக்க, சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்தை, எம்.ராஜேஷ் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில், இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. காமெடி என்டெர்டெயினராக இது உருவாகிறது. இன்னொரு படத்தை, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் இதில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கிறார்.

‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில், அவருடன் இணைந்து அர்ஜுனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

24 ஏம்எம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல் ரூபன் எடிட் செய்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமான இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் படத்துக்கு யுவன் இசையமைப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்கு இசையமைத்துள்ளார் யுவன். இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

LEAVE A REPLY