ஹர்பஜன் சிங்குடன் விவகாரத்துக்குப் பிறகுதான் கடும் குடிகாரன் ஆனேன்: மீண்டும் ஆஸி.வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வேதனை

20
ஹர்பஜன்

ஜனவரி 2008-ல் நடந்த சிட்னி டெஸ்ட் போட்டி நடுவர் அடாவடித் தீர்ப்புகளினால் இந்திய வெற்றியைப் பறித்தது ஒரு புறம் இருக்க, அந்தப் போட்டியில் நடுவர் அடாவடிகளை திசைத் திருப்ப உருவாக்கப்பட்ட ‘மன்க்கி கேட்’ விவகாரத்தை ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மீண்டும் கிளப்பியுள்ளார்.

அந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 14 தீர்ப்புகள் இந்தியாவுக்கு எதிராகச் சென்றது, குறிப்பாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு மட்டும் 9-10 தடவை அவுட்டை நடுவர்கள் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மையான சர்ச்சை.

இதில் இந்திய வீரர்களை அவர் ஸ்லெட்ஜிங் வேறு செய்தார், அதில் கடுப்பான ஹர்பஜன் சிங் ‘தேரி மா..ங் கி’ என்று கூறியதை தன்னை குரங்கு என்று ஹர்பஜன் திட்டியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் பிரச்சினைகளை எழுப்பி பூதாகாரப் படுத்த சச்சின் தலையீட்டில் விஷயம் சுமுகமாக முடிந்தது. சுமுகமாக முடியவில்லை எனில் பாதியிலேயே தொடரை முடித்துக் கொள்ளக் கூட பிசிசிஐ தயாராக இருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின, வெலவலத்த ஆஸி. தங்கள் பொய்ப்புகாரை மேலும் பரிசீலிக்காமல் கைவிட்டதுதான் நடந்த கதை. அடுத்த பெர்த் டெஸ்ட் போட்டியில் சற்றும் மனம் தளராத இரும்பு கேப்டன் அனில் கும்ப்ளே தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றதும் நினைவு கூரத்தக்கது.’

இந்நிலையில் ஏகப்பட்ட குடி சம்பவங்கள், ஒழுங்கீனங்களால் பாதிக்கப்பட்டு மைக்கேல் கிளார்க்கினா கடுமையாக எச்சரிக்கப்பட்டும் திருந்தாத சைமண்ட்ஸ் அணியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டதுதான் உண்மை, ஆனால் அவரோ இன்று வரை ஹர்பஜன் சிங் விவகாரம்தான் தன் கிரிக்கெட் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்தது என்று திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.

அவர் தற்போது ஆஸ்திரேலியா புரோட்காஸ்டிங் கார்ப்பரேஷன் வானொலிக்குக் கூறியதாவது:

அந்தக் கணம்தான் என் வாழ்க்கையின் சரிவு தொடங்கியது. அதன் பிறகுதான் கடுமையாகக் குடிக்கத் தொடங்கினேன், எனக்கும் மனைவிக்கும் பிரச்சினைகள் தொடங்கின. எனக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டது, என் சகவீரர்களையும் இழுத்துவிட்ட இந்தச் சம்பவத்தினால் என் குற்ற உணர்வு அதிகரித்தது.

நான் அந்த விவகாரத்தில் என் சக வீரர்களையும் தேவையில்லாமல் இழுத்து விட்டு விட்டேன்.

மேலும் ஹர்பஜன் சிங் என்னை அவ்வாறு அழைத்தது முதல் முறையல்ல, இந்தியாவில் கூட அதற்கு முந்தைய தொடரில் அவர் என்னை மன்க்கி என்றுதான் அழைத்தார்.

நான் இந்திய ஓய்வறைக்குள் நுழைந்து ஹர்பஜன் சிங்குடன் கொஞ்சம் தனியாகப் பேச முடியுமா என்றேன், அவர் வெளியே வந்தார், நான் அவரிடம், ‘என்னை அப்படி அழைப்பதை நிறுத்தவில்லை எனில் விவகாரம் கையை மீறி போகும் என்று அப்போதே கூறினேன்” என்று சைமண்ட்ஸ் ஊற்றி மூடிய விவகாரத்தை மீண்டும் தேய்ந்த ரெக்கார்ட் போல் போகும் இடங்களிலெல்லாம் தெரிவித்து வருகிறார்.

ஆனால் அதன் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் இருவரும் சேர்ந்து ஆடியதை சைமண்ட்ஸ் சவுகரியமாக மறந்து விட்டார்.

LEAVE A REPLY