குடியுரிமை குறித்த ட்ரம்ப்பின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

14
குடியுரிமை

அமெரிக்காவில் குடியுரிமை இல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை வழங்கப்படாது என்ற ட்ரம்ப்பின் திட்டத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்  குடிபெயர்ந்தவர்களுக்காக விதிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ”குடியுரிமை இல்லாது அமெரிக்காவுக்கு குடியேறிய பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாது என்ற புதிய உத்தரவை விதிக்க விரும்புகிறேன்.  எனது முடிவை வெள்ளை மாளிகை வழக்கறிஞர் பரீசிலனை செய்து வருகின்றார்” என்றார்.

அமெரிக்க அரசியலைப்புச் சட்டத்தின் 14-வது திருத்தத்தின்படி,  அந்நாட்டில்  பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான முழு உரிமை உள்ளது என்று கூறுகிறது.

இந்த நிலையின் ட்ரம்ப்பின் முடிவுக்கு அந்நாட்டின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சபாநாயகர் பால் ராய்ன் கூறும்போது, ”உங்கள் உத்தரவின் மூலம் குடிமக்களின் பிறப்புரிமையைத் தடுக்க முடியாது. முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வரவிருந்த புதிய குடியுரிமைச் சட்டத்தையும் நாங்கள் எதிர்த்தோம்” என்றார்.

ட்ரம்ப்பின் முடிவு குறித்து அமெரிக்க குடியுரிமை கவுன்சில் நிர்வாக இயக்குநர் பெத் வெர்லின் கூறும்போது, ”அமெரிக்க பிறப்புரிமை என்பது நம்மை ஒரு தேசத்தை சேர்ந்தவர்களாக வரையறுக்கிறது. மேலும் இது அமெரிக்க பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளது.  நடைமுறையில் இருக்கும் பிறப்புரிமைச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் குடியுரிமைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

எந்த அதிபராலும் பேனாவைக் கொண்டு அரசியலமைப்பைத் திருத்த முடியாது. புதிய அரசியலைப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமே இதனை நீக்க முடியும்” என்றார்.

மேலும் ட்ரம்ப்பின் இந்தத் திட்டத்துக்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலேயே  எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

LEAVE A REPLY