‘சர்கார்’ படத்துக்கு புதிய சிக்கல்: தடை கோரும் வழக்கில் நாளை விசாரணை

14
சர்கார்

தொடர் சிக்கல்களைச் சந்தித்துவரும் ‘சர்கார்’ திரைப்படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. கதையைத் திருடியதாக தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

நடிகர் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது.

’சர்கார்’ படம் குறித்த செய்திகளில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பும் கூடவே பரபரப்பான தகவல்களும் சுற்றி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டரால் சர்ச்சையானது. இது குறித்து அன்புமணி, அமைச்சர் ஜெயக்குமார், ராமதாஸ் உள்ளிடோர் கண்டனம் தெரிவித்தனர்

சிகரெட் பிடிக்கும் காட்சியை போஸ்டரில் வெளியிட்ட ’சர்கார்’ பட நிறுவனம், இயக்குநர், நடிகர் விஜய் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுகாதாரத் துறை மூலமாக விஜய், முருகதாஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பேரில் அந்த சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர்கள் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டன.

அடுத்து பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய முதல்வர் குறித்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு பல அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில் வரும் நவ. 6 அன்று வெளியிடப்பட உள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் ’சர்கார்’ சிக்கி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது கதையைத் திருடி ’சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் என்கிற ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், ‘செங்கோல்’ என்ற தலைப்பில் தான் தனது கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அந்தக் கதையை திருடி, ‘சர்கார்’ என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றபோது அவர் இரு தரப்பையும் அழைத்து விசாரித்தார். பின்னர், ’செங்கோல்’ மற்றும் ’சர்கார்’ இரண்டும் ஒரே கதை தான் என உத்தரவிட்டார் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

படத்தை வெளியிடக் கூடாது, படத்தின் டைட்டிலில் தன்னுடைய பெயரைச் சேர்க்க வேண்டும், அப்படி வெளியிட்டால் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் முறையிட்டார்.  அதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கை நாளை விசாரிக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்

படத்தின் கதை விவகாரம் உள்ளிட்ட வேறு ஏதாவது விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் படம் வெளியீட்டிற்கு எதிராக வழக்கு ஏதேனும் வரும் என்பதால் கேவியட் மனுவை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் தாக்கல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY