பாஜகவை வீழ்த்துவதுதான் இலக்கு; ராகுல் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் சொல்லவில்லை: ப.சிதம்பரம் பகீர் பேட்டி

19
பாஜக

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. எங்களுடைய இலக்கு பாஜகவை வீழ்த்தி, முற்போக்கு அரசை மத்தியில் அமரவைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அதிர்ச்சி அளித்துள்ளார்.

தனியார் தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு முன்னாள் நிதிஅமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ப.சிதம்பரம் அளித்த பதிலில் கூறியதாவது:

”2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைமை தலையிட்டு அவ்வாறு பேசவேண்டாம் என்றுகூறிவிட்டது. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக அகற்றப்பட வேண்டும்.

அந்த இடத்தில் மாற்று அரசாக, முற்போக்கு அரசு அமர வேண்டும். தனிநபர்களுக்குச் சுதந்திரம் அளிக்கும் அரசாக, வரித் தீவிரவாதம் இல்லாத அரசாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசாக, விவசாயிகளின் நிலையை உயர்த்தும் அரசாக மத்தியில் அமர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரதமர் பதவி என்பது ஒரு பொருட்டு அல்ல. ராகுல் காந்தியும் பிரதமர் பதவி வேண்டும் என்று கூறவில்லை. காங்கிரஸ் கட்சியும், எங்கள் கட்சியில் இருந்து பிரதமர் வர வேண்டும் என்றும் கூறவில்லை. எங்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், எங்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்”.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு தேர்தலில் வென்றால், கூட்டணிக் கட்சிகள் என்னைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்தால், நான் பதவி ஏற்கத் தயார் என்று கூறி இருந்தார்.

மேலும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தால் நான் ஏன் பிரதமராக பதவி ஏற்கக்கூடாது என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY