பிரதமராவது இரண்டாம்பட்சம்தான், முதல் குறிக்கோள் பாஜகவை தோற்கடிப்பதே: ராகுல் காந்தி திட்டவட்டம்

25

கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராவேன், ஆனால் முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மாநாடு ஒன்றில் பேசிய ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறியதாவது:

“இது இரண்டு கட்ட நடவடிக்கையாகும். இதில் யார் பிரதமராவது என்ற முடிவு இரண்டாவதாகத்தான் வரும். கூட்டணிக் கட்சிகளுடன் இதனை விவாதித்துள்ளோம், இது இரண்டு கட்ட நடவடிக்கை என்பதை நாங்கள்தான் முடிவு செய்தோம். ஒன்று, முதலில் ஒருங்கிணைந்து பாஜகவை தோற்கடிப்பது, தேர்தல் முடிந்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

கூட்டணி கட்சிகள் விரும்பினால் நான் நிச்சயமாகப் பிரதமராவேன்.

நான் கோயில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் தர்க்காக்களுக்கும் சென்று கொண்டுதான் இருக்கிறேன். பாஜகவுக்கு இது பிடிக்கவில்லை, அவர்களை இது கோபப்படுத்துகிறது. பாஜக ஏதோ தாங்கள் மட்டுமே கோயில்களுக்குச் செல்பவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது.

விமர்சனங்களை புரிந்து கொள்கிறேன் அவை என்னைத் தொந்தரவு செய்வதில்லை. என்னுடைய பதில் விமர்சனங்களை கவனிப்பதே.

தலைமைப்பண்பு என்பது ஒரு பரிணாமம், அது சீராக மாறிக்கொண்டிருக்கும் ஒரு பண்பாகும். நாம் கற்றுக் கொள்கிறோம். என்னுடைய வளர்ச்சியில் நான் மக்களிடம் செல்வேன் அவர்கள் கூறுவதை காது கொடுத்துக் கேட்பேன். அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பேன்.

இன்று 1.2 பில்லியன் மக்கள் மீது மூச்சுத்திணறும் ஒற்றைக் கருத்தியல் திணிக்கப்படுகிறது. இந்த விதத்தில் காங்கிரஸ் கட்சிதான் பாஜகவுக்கு வலுவான எதிர்ப்பைக் கட்டமைக்கும்.

நான் கேள்விகளையும் விமர்சனங்களையும் எடுத்துக் கொள்கிறேன், பிரதமர் ஏன் இவற்றை எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவுக்கு ஒரு ஆற்றுப்படுத்துதல் தேவை மக்கள் பிரிவினர் அனைவரும் இதனை விரும்புகின்றனர்.

நான் என் அம்மாவிடமிருந்து தலைமைப்பண்பு பற்றி கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் முன்பெல்லாம் பொறுமை இழப்பேன், ஆனால் அம்மாதான் எனக்கு பொறுமையைக் கற்றுக் கொடுத்தது. நான் கூட சிலவேளைகளில் அவரிடம் சொல்வேன் ‘நீங்கள் ரொம்ப பொறுமையாக இருக்கிறீர்கள்’ என்று. அவர் உள்ளுணர்வு மூலம் செல்பவர், நான் சிந்தித்துச் செயல்படுபவன். ஆனால் இப்போது என் தாயார் போல் நானும் நிறைய பொறுமையுடன் கேட்கத் தொடங்கியுள்ளேன்.

இவ்வாறு கூறிய ராகுல் காந்தி அரசின் மீது பணமதிப்ப்பு நீக்கம் அயல்நாட்டுக் கொள்கை, நிர்வாகம் என்று பலதுறைகள் சார்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

LEAVE A REPLY