சபரிமலை ஐய்யப்பனை தரிசிக்க பெண் பக்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி தாய்மையின் புனிதத்திற்கு கிடைத்த வெற்றி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் வரவேற்பு

63
கேரளாவில் அடர்ந்த வனத்திற்குள் எழுந்தருளியுள்ள சபரிமலை ஐய்யப்பனை ஆண்டுதோறும் பலலட்சக்கணக்கான பக்தர்கள் ஒரு மண்டலம் கடுமையான விரதம் இருந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர்.
கலியுகத்தெய்வமாக போற்றப்படும் ஐய்யப்பன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லைகளும்-துன்பங்களும் கொடுத்து வந்த ”மகிஷி” எனும் அரக்கியை அழிப்பதற்காக அவதாரம் எடுத்து வந்தார். சிவபெருமானுக்கும், மோஹினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் மகனாக பிறந்தவர் தான் பகவான் ஐய்யப்பன்.
பந்தளராஜாவின் மகனாக வளர்ந்த ஐய்யப்பன் அரக்கியான மகிஷியை அழித்து தேவர்களையும், முனிவர்களையும் காத்தார். தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறிய பிறகு தெய்வமாக மாறி, நைஷ்டிக பிரம்மச்சாரியாக யோக நிலையில் ஐய்யப்பன் சபரிமலையில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
ஆன்மிக சிறப்புபெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்காத வழக்கம் பலநூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. அதாவது சபரிமலைக்கு 10வயது முதல் 50வயது வரைக்குட்பட்ட பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், சிறுமிகளும், வயதான பெண்மணிகளும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இருந்தாலும் சபரிமலை யாத்திரைக்கு பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு பொருந்தாத வகையில் பல்வேறு உதாரணங்கள் சொல்லப்படுகிறது. சபரிமலையில் ஐய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருக்கிறார். இவருக்கான சபரிமலை யாத்திரைக்கு ஒரு மண்டலம், அதாவது ஆறுவாரங்கள், விரதம் இருக்கவேண்டியது சம்பிரதாயம்.
42நாட்கள் தொடர்ந்து பெண்களால் விரதம் இருக்க முடியாது என்பதற்காக சொல்லப்படும் காரணத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதாவது மாதம்தோறும் பெண்களுக்கு மாதவிடாய் வருவதால் பெண்களால் 42நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பது அறியாமையின் வெளிப்பாடாகும். பெண்களுக்கு மாதவிடாய் வருவது என்பது இயற்கையானது.
மாதவிடாய் எனப்படும் மாதவிலக்கு என்பது முழுக்கமுழுக்க பெண்களின் உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானது தான். அர்த்தமில்லாத மூடநம்பிக்கைகளுக்கும், மாதவிடாய்க்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. ஆன்மிக சிறப்புபெற்ற ஒரு வழிபாட்டு தலத்திற்கு பெண்கள் வழிபட செல்லக்கூடாது என்பதற்கு இதுபோன்ற சிறுமையான காரணத்தை உதாரணமாக கொண்டு தடுத்திருப்பது பெண்களை வேதனைக்குள்ளாக்கி வந்தது.
இதனையெல்லாம் அறிந்த நான்(சற்குரு சீனிவாச சித்தர்) சபரிமலை வழிபாட்டிற்கு தாய்மையாக மதிக்கப்படும் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
இந்நிலையில், சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் அன்றே சொன்ன கருத்தை வரவேற்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தாய்மையின் புனிதத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.
இந்த தீர்ப்பு எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் பெண் பக்தர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. நான் ஏற்கனவே சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன், தொடர்ந்து இதனை பதிவு செய்தும் வந்துள்ளேன்.
எமது ஸ்ரீசித்தர் பீடத்தில் கருவறைக்குள்ளேயே பெண்கள் சென்று அம்பாளுக்கு அனைத்து பூஜைகளும் செய்கிறார்கள். ஆடி மாதம் அமாவாசை நாளில் ஸ்ரீசித்தர் பீடத்தில் அனைத்து வழிபாடுகளையும் தாய்மார்களே செய்வது என்பது ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வருகிறது.
பெண்கள் இயல்பாகவே பக்தி உணர்வு மிக்கவர்கள். பக்தி உணர்வினால் எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து தவறாமல் கடவுள் வழிபாடு செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்களில் பலருக்கும் சிறுவயதில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் சென்று வழிபட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கணவரும், குழந்தைகளும் மட்டும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் போது எங்களால் போக முடியவில்லையே என்ற வருத்தமும் பெண்களிடத்தில் இருந்தது.
தற்போது பெண்களின் இந்த விருப்பத்தை உச்சநீதிமன்றம் நிறைவேற்றியுள்ளதுடன், இனிமேல் குடும்பத்தோடு, கோவிலுக்கு செல்லவும் வழி அமைத்து தந்துள்ளது. இது மகிழ்ச்சியாகவும், மனதிருப்தியாகவும் இருக்கிறது.

LEAVE A REPLY