மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

17
தமிழகம்

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் வெப்பச்சலனத்தாலும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனத்தாலும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோவையில் 60, வால்பாறையில் 50, கூடலூர் பஜார், பீளமேடு விமான நிலையம், சூலகிரி, கரூர் பரமத்தி, ஈரோடு ஆகிய இடங்களில் தலா 30 மிமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

LEAVE A REPLY