விஜய் மல்லையா ‘கிரேட் எஸ்கேப்’ – பின்னணியில் பிரதமர் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

16
விஜய்

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிச் செல்ல சிபிஐ துணையாக இருந்துள்ளது. இந்த விவகாரத்தில் மல்லையாவுக்கு பிரதமர் மோடி உதவியுள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆகிய இரு துறைகளும் சேர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு வெளியேறும் முன், முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன் எனக் கூறினார். இதனை ஜேட்லி மறுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி புகார் கூறி வருகின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

‘‘விஜய் மல்லையா தொடர்பாக சிபிஐ அனுப்பிய ‘லுக் அவுட்’ சுற்றறிக்கையில் கைது செய்யுங்கள் என்பது, தகவல் தெரிவியுங்கள் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டு விஜய் மல்லையா தப்பிக்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடியாகவே தொடர்பு உள்ளது. பிரதமர் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கையில் மாற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை’’ எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY