அடாவடியாக, ரவுடித்தனமாக செயல்படும் திமுக உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை

7
அடாவடி

தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு – வெறுப்புகள் காரணமாக திமுக உறுப்பினர்கள் அடாவடியாக செயல்படும் போக்கினை தலைமை அனுமதிக்காது. யாராக இருந்தாலும் அவர்கள் திமுக விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். முன்னாள் கவுன்சிலராகப் பொறுப்பு வகித்த இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் சத்தியா என்ற இளம்பெண்ணைக் கொடூரமான முறையில் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் என்றும் பாராமல் சத்தியாவைக் கண்டபடி தாக்கியதும், வயிற்றில் எட்டி உதைத்ததும், மிதித்ததும் சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது. பெரம்பலூர் டவுன் போலீஸார் செல்வகுமாரைக் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ”கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்திலும், கழகக் கட்டுப்பாட்டினை மீறியும் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்தவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு – வெறுப்புகள் இவற்றின் காரணமாக கழக உறுப்பினர்கள் அடாவடியாக செயல்படும் போக்கினை திமுக தலைமை அனுமதிக்காது. ரவுடித்தனமாக செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போல செயல்படும் கழகத்தினர் யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள்.

கழகத்தினர் இதனை எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். தனி நபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்கள் கடும் நடவடிக்கைக்குள்ளாவார்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY