5-வது டெஸ்டில் இந்தியா-இங்கி. இன்று மோதல்

13
இந்தியா

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 1-3 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல்மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சவுத்தாம்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியால் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ள இந்திய அணி, அதில் இருந்து மீண்டு வரும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

வேகப்பந்து வீச்சில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில் அணியின் பேட்டிங் சீரற்ற நிலையில் உள்ளது. விராட் கோலியை தவிர மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த தவறியுள்ளனர். புஜாரா, ரஹானே ஆகியோர் ஒரு சில இன்னிங்ஸில் கைகொடுத்தனர். ஆனால் வெற்றிக்கான இன்னிங்ஸ் அவர்களிடம் இருந்து வெளிப்படவில்லை.

தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் விதமாக இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவண் அல்லது கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு அறிமுக வீரராக பிருத்வி ஷா இடம்பெறக்கூடும். அதேபோல் மற்றொரு இளம் வீரரான ஹனுமா விஹாரிக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும் என தெரிகிறது. அவர், களமிறங்கும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா தனது இடத்தை இழக்கக்கூடும்.

மேலும் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் சேர்க்கப்படக்கூடும்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை தொடரை வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியின் சீனியர் பேட்ஸ்மேனான அலாஸ்டர் குக் இந்த டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் அவர், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

LEAVE A REPLY