திருக்குவளையில் கருணாநிதியின் சொந்த வீட்டில் ஸ்டாலின்: உருக்கமான பதிவு

15

திருக்குவளையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த வீட்டின் வருகைப் பதிவில் ஸ்டாலின் தன் நினைவுகளைப் பதிவு செய்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்றார். திமுக தலைவரான பிறகு தன் தந்தையின் சொந்த ஊரான திருக்குவளைக்கு மு.க.ஸ்டாலின் செல்வது இதுவே முதல்முறை.

திருக்குவளையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுமட்டுமல்லாமல், அங்கு வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயப் பெண்கள் ஸ்டாலினைக் காண ஆவலுடன் ஓடிவந்தனர். அப்போது, வயதான பெண்மணி உணர்ச்சிவயப்பட்டு கண்ணீருடன் ஸ்டாலினிடம் பேசினார். செல்லும் வழியில் பள்ளி மாணவர்கள் சிலரும் ஆர்வத்துடன் ஸ்டாலினுடன் கைகுலுக்கினர்.

இதையடுத்து, திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் சொந்த வீட்டுக்கு ஸ்டாலின் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் ஸ்டாலின் தன் நினைவுகளைப் பதிவு செய்தார்.

அதில், “தலைவரின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பலமுறை வந்துள்ளேன். தலைவர் அவர்களுடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வந்துள்ளேன்.

கழகத் தலைவராக வந்திருந்தாலும், தலைவர் கலைஞரின் தொண்டனாக அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து தொடரும். வாழ்க வளமுடன்” என எழுதியுள்ளார்.

LEAVE A REPLY