6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

29
மழை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கடற்கரைப் பகுதியில் புவனேஸ்வருக்கு தென்கிழக்கே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இந் நிலையில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்குதிசைக் காற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி, தமிழகப் பகுதிகள் வழியாக செல்லக்கூடிய நிலையில், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மலைப்பகுதிகள் அடங்கிய நீலகிரி மற்றும் வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.

தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டப் பகுதி களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யும். மீனவர்கள் வடக்கு ஆந்திர கடற்கரை மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் அதிகபட்சமாக 270 மிமீ, சின்னக் கல்லாரில் 210 மிமீ, பேச்சிப் பாறையில் 200 மிமீ மழை பதிவாகி உள்ளது.

LEAVE A REPLY