6 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் பயணத்துக்கு தடை

8
எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் பயணத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 8,311 கனஅடியாகவும், நீர்மட்டம் 117.50 அடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடியாகவும் இருந்தது. இந்நிலையில், கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடக மாநிலம் கபினியில் இருந்து விநாடிக்கு 70,000 கன அடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 60,000 கனஅடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில், கபினியில் திறக்கப்பட்ட நீர் 9-ம் தேதி (நேற்று) நள்ளிரவுக்குள் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஆர்எஸ் அணையில் திறக்கப் பட்ட நீர் இன்று (10-ம் தேதி) இரவு மேட்டூரை வந்தடைய வாய்ப்புள் ளது. எனவே, மேட்டூர் அணை இன்று மீண்டும் 120 அடியை எட்டும் என்றார்.

இந்நிலையில், மேட்டூர் அணை யில் இருந்து நீர் திறப்பு நேற்று மாலை விநாடிக்கு 30,000 கனஅடி யாக அதிகரிக்கப்பட்டது. இதனால், 2 வாரங்களுக்கு பின்னர் மீண் டும் 16 கண் மதகு வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இதற் கிடையில், சேலம் மாவட்ட நிர் வாகம் மேட்டூர் மற்றும் காவிரி கரை யோரக் கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி, ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தடைவிதித்துள்ளார். பரிசல் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டுள்ளது. மத்திய நீர் ஆணை யத்தின் தென்னிந்திய ஆறுகள் பிரிவு செயற்பொறியாளர் ஆர்.சரவ ணன், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சா வூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சி யர்களுக்கு அனுப்பியுள்ள வெள் ளம் தொடர்பான எச்சரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீர், அடுத்த 2 நாட் களுக்குள் மேட்டூர் ஆணையை வந்தடையும்போது அதன் அளவு விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியை தாண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதனால் சம்பந் தப்பட்ட மாவட்டங்களில் தாழ் வான பகுதிகளில் உரிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை ஆணை யர் சத்யகோபாலிடம் கேட்ட போது, “இதற்கு முன்பு மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருந்தபோது, காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர் களுக்கு, உரிய பாதுகாப்பு நட வடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதே போன்று தற்போதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தமிழகத்துக்கான மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

கேரள மாநிலம் மற்றும் தெற்கு கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. அதன் காரணமாக மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மண நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், இதர தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 17 செமீ, சின்னகள்ளாரில் 12 செமீ, தேனி மாவட்டம் பெரியாரில் 12 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 10 செமீ, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் 7 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது என்று கூறினர்.

LEAVE A REPLY