கருணாநிதி இல்லாத கோபாலபுரம் இல்லம்: கண்ணீருடன் பார்த்துச் செல்லும் தொண்டர்கள்

18
கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி 63 ஆண்டுகளாக வசித்து வந்த கோபாலபுரம் இல்லத்தை கண் ணீருடன் அக்கட்சி தொண்டர்கள் பார்த்துச் செல்கின்றனர்.

திரைத் துறையில் வசனகர்த் தாவாக ஜொலித்த கருணாநிதி, 1955-ம் ஆண்டு சென்னை கோபாலபுரம் 4-வது தெருவில் ஸ்ரீவேணுகோபாலசாமி கோயில் அருகே சொந்த வீடு வாங்கினார். அன்றிலிருந்து மரணம் அடையும் வரை 63 ஆண்டுகள் இந்த வீட்டிலேயே அவர் வசித்து வந்தார்.

1957 சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் வென்று முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். 1967-ல் அண்ணா தலை மையில் திமுக ஆட்சி அமைந்த போது பொதுப்பணித் துறை அமைச்சரானார். அண்ணா மறை வுக்குப் பிறகு 1969-ல் முதல் வரானார்.

60 ஆண்டுகள் எம்எல்ஏ, 50 ஆண்டுகள் திமுக தலைவர், 19 ஆண்டுகள் முதல்வர் என அரசியலில் உச்சத்தை தொட்டாலும் தெருமுனையில் உள்ள இந்த சிறிய வீட்டில் இருந்து அவர் மாறவே இல்லை. பழமையான இந்த வீட்டை இடித்து விட்டு புதிதாகவும் கட்டவில்லை. அந்த அளவுக்கு கோபாலபுரம் இல்லம் கருணாநிதியின் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, நரேந்திர மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பல வெளிநாட்டு பிரமுகர்களும் கருணாநிதியை சந்திக்க வந்து சென்ற வரலாறு இந்த வீட்டுக்கு உண்டு.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலையில் இருந்த கருணாநிதி 19 மாதங்கள் இந்த வீட்டில்தான் சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஜூலை 28-ம் தேதி அதிகாலை இந்த வீட்டிலிருந்து ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், திரும்பவே இல்லை. உயிரிழந்ததும் முதலில் கோபாலபுரம் இல்லத்தில்தான் அவரது உடல் வைக்கப்பட்டது.

கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் நாளான நேற்று கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றோம். கருணாநிதி இருக்கும்போது எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த வீடு, தற்போது களையிழந்து காணப்பட்டது. உடல்நலமின்றி இருக்கும் தயாளு அம்மாள் மட்டுமே இங்கு இருக்கிறார். அவரை பணியாளர்கள் கவனித்துக் கொள்கின்றனர். பாதுகாப்புக்காக காவலர்கள் இருந்தனர்.

கருணாநிதி பயன்படுத்திய கார் போர்டிகோவில் நிறுத்தப் பட்டுள்ளது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த தொண்டர்களில் சிலர் அவர் வாழ்ந்த வீட்டையும் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். பணியாளர்கள் சஞ்சீவி, கோபி ஆகியோர் மிகுந்த சோகத்துடன் வாயிலில் நின்றிருந்தனர். மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் நேற்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து தாயார் தயாளு அம்மாளை சந்தித்துவிட்டுச் சென்றனர். கருணாநிதி இல்லாத கோபாலபுரம் இல்லத்தை திமுக தொண்டர்கள் கண்ணீருடன் பார்த்துச் செல்வதை காண முடிந்தது.

LEAVE A REPLY