குடியாத்தம் அருகே மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை அகற்றம் 

13
குடியாத்தம்

குடியாத்தம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வைக்கப்பட்ட மார்பளவு சிலையை வருவாய்த் துறையினர் அகற்றினர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக இருந்தார். இவர் திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி விநாயகபுரம் என்ற பகுதியில் புதன்கிழமை அமைதிக் கூட்டம் நடத்தினார்.

பின்னர், அங்கிருந்த திமுக கொடிக்கம்பத்தின் பீடத்தின் மீது இரண்டரை அடி உயரமுடைய கருணாநிதியின் மார்பளவு சிலையை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பகுதி மக்களும் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதிக்கு திடீரென சிலை வைக்கப்பட்ட தகவல் வருவாய்த் துறையினருக்கு கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற வருவாய்த் துறையினர் சிலையை அகற்றினர்.

ஜிஆர்.கிருஷ்ணமூர்த்தி கடந்த 2010 ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக இருந்தபோது பரதராமி அடுத்துள்ள சாமிரெட்டிபள்ளி கிராமத்தில் கருணாநிதிக்கு கோயில் எழுப்பும் பணியில் ஈடுபட்டார். கட்டுமான பணி தொடங்கிய நிலையில் இதுதொடர்பான தகவல் திமுக தலைமைக்கு தெரியவந்தது. கட்சித் தலைமையின் கட்டளையால் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

அந்தக் கோயிலுக்காக தயார் செய்யப்பட்ட கருணாநிதியின் மார்பளவு சிமென்ட் சிலையை கிருஷ்ணமூர்த்தி பாதுகாத்து வந்துள்ளார். தற்போது திமுக தலைவர் கருணாநிதி மறைவால் மன வருத்தத்தில் இருந்தவர் தன்னிடம் பாதுகாப்பாக இருந்த சிமெண்ட் சிலைக்கு வெண்கல வர்ணம் பூசி நேற்று முன்தினம் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என தெரியவந்தது. உரிய அனுமதி பெற்று சிலையை வைக்க வேண்டும் எனக்கூறி சிமெண்ட் சிலையை அவரிடமே வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY