தோழருக்கு வணக்கம்; கருணாநிதி இறுதி ஊர்வலத்தை கண்டு கண்கலங்கிய முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா

16
வணக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், முதுபெரும் சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா, கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து அவருக்கு விடை கொடுத்து கண்கலங்கும் புகைப்படங்கள் வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியில் தலைமை பொறுப்பிலிருந்த இரு பெரும் தலைவர்கள் காங்கிரஸை உதறி வெளியேறினார்கள். ஒருவர் திராவிட இயக்கத்தின் முன்னோடி திராவிடர் கழகத்தை துவக்கிய பெரியார்.

இன்னொருவர் பொதுவுடமை கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா. இருபெரும் தலைவர்கள் பின் வெவ்வேறு திசையில் பயணிக்க, தி.க விலிருந்து உருவான திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸுக்கு சவாலாக விளங்கியது.

மாணவர் பருவத்தில் அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் மூலம் கவரப்பட்டார். சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டியவர்.

1941-ல் போராட்டக் கனல் மதுரையையும் பற்றியது. பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா கைதானார். வழக்கறிஞர் கனவு அத்துடன் முடிந்தது.

பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது நெல்லையில் பல்வேறு கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தினார். தடியடியில் காயமடைந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். எட்டு ஆண்டுகள் சிறைவாசம், மூன்று ஆண்டுகள் தலைமறைவு,

கருணாநிதையைப்போன்றே இலக்கியவாதி, தீக்கதிர், ஜனசக்தியின் ஆசிரியராக இருந்து வழி நடத்தியவர். கருணாநிதி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அதே 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

1962-லும் தோல்வி. 1967-ல் மதுரை மேற்குத் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்றார். அடுத்தடுத்து நடந்த 1977, 1980 தேர்தல்களிலும் (மதுரை கிழக்கு) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

1993-ல் திமுக பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதிமுகவை ஆதரித்த போதும் கருணாநிதி, சங்கரய்யா நட்பு நீடித்தது. 1996-ல் எதிரணியில் நின்றபோதும் ஆட்சிக்கு வந்து முதல்வரான கருணாநிதிக்கும் இவருக்குமான நட்பு நீடித்தது.

கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவர் சங்கரய்யா. ஓய்வு காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினாலும் இன்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். கருணாநிதியின் நெருங்கிய நண்பரான சங்கரய்யாவுக்கு அவரது மறைவு பெரும் துயரத்தை அளித்தது.

வயோதிகம் காரணமாக நேரில் அஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும், தனது வீட்டில் இறுதி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த சங்கரய்யா கம்யூனிஸ்டுகள் பாணியில் கையை உயர்த்தி ‘போய் வா தோழா’ என்பது போல் அஞ்சலி செலுத்தும் காட்சியும், கண்ணில் வழியும் நீரை துடைக்கும் காட்சியும் வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY