சர்வாதிகாரி போல் மோடி: பிரதமருக்கு உணர்த்துவதற்காக ஹிட்லர் வேடம் அணிந்து வந்த தெலுங்குதேசம் எம்.பி.

17
சர்வாதிகாரி

சர்வாதிகாரி போல் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்பதை உணர்த்துவதற்காக, அடோல்ப் ஹிட்லர் போல் உடை, வேடம் அணிந்து தெலுங்குதேசம் எம்.பி. நரமள்ளி சிவபிரசாத் இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏமாற்றியநிலையில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலங்குதேசம் கட்சி கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையிலும் இருந்து விலகியது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும், தற்போது நடந்துவரும் மழைக்காலக் கூட்டத்தொடரிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்தும் அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. நரமள்ளி சிவபிரசாத் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்இருந்து ஒவ்வொரு நாளும் விதவிதமாக வேடம் அணிந்து, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி வலியுறுத்தி வருகிறார். இன்று ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் வேடம் அணிந்து வந்து நாடாளுமன்றம் வந்தார்.

பிரதமர் மோடி சர்வாதிகாரி ஹிட்லர் போல் நடந்து கொள்ளக்கூடாது என்பதை விளக்கும் வகையில் அவர் வேடம் அணிந்துவந்ததாக் கூறப்பட்டது.

காக்கி நிறத்தில் ஆடை, ஹிட்லர் போல் மீசை அணிந்து வந்திருந்து அனைவரின் கவனத்தையும் சிவபிரசாத் ஈர்த்தார். அவர் கூறுகையில், ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரை பின்பற்றி நடக்காதீர்கள் என்று கூறவே இந்த ஹிட்லர் ஆடையில் வந்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துவிட்டு, பின்வாங்கிவிட்டது. மக்களுக்கு என்ன தேவை என்பதை மோடியால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இன்னும் அதுபோல் நடக்காதீர்கள் என்று நான் மோடிக்குக் கூறிக்கொள்கிறேன்.

நம்முடைய ஜனநாயகத்தில் மக்களின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஆட்சியாளர்கள் அறிந்து கொள்வது அவசியமாகும். நான் ஒரு நடிகர் ஆதலால் அமைதியாக இருக்க முடியாது. என்னுடைய கருத்துக்களை இப்படி பல்வேறு வேடங்களை அணிந்து தெரிவிக்கிறேன். பெண்கள் பாதிக்கப்பட்டபோதும், பணமதிப்புநீக்கத்தின்போதும் அதற்கு ஆதரவாக உடை அணிந்து வந்திருந்தேன்.

இவ்வாறு சிவபிரசாத் தெரிவித்தார்.

திரைப்படங்கள், நாடகங்களில் நடந்த அனுபவரான சிவபிரசாத் மத்திய அரசை ஈர்க்கும் வகையில், பெண்வேடம், ஆஞ்சநேயர், மாடுமேய்ப்பவன், பாஞ்சாலி, முஸ்லிம் வேடம், ஸ்வச்பாரத் சேவகர் என பல்வேறு வேடங்களில் வந்து ஆந்திரமாநில கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY