“தலித்துகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர் மோடி”: உதாரணத்துடன் காட்டமாக பேசிய ராகுல் காந்தி

15
தலித்து

தலித் மக்களுக்கு எதிரான மனநிலை உடையவர் பிரதமர்மோடி. அதனால்தான், எஸ்,எஸ்டி வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த நீதிபதிக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்தார்.

எஸ்சி, எஸ்டி சட்டத்தில் நீதிமன்றம் திருத்தம் செய்யப்பட்டதற்கு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பு சார்பில் இன்று போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது கூட்டத்தினர் மத்தியில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி, தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் எதிரான மனநிலையைக் கொண்டவர். பாரதிய ஜனதா கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும், ஆட்சியாளர்களின் மனதிலும் தலித்துகளுக்கு எந்தவிதமான இடமும் இல்லை.

பிரதமர் மோடியின் மனதில் தலித்களுக்கு இடம் இருந்திருந்தால், தலித்களுக்கான கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, ஒரு புத்தகத்தில் தலித்துகள் குறித்து என்ன எழுதினார் தெரியுமா? தலித்துகள் சுத்தம் செய்யும் பணியைச் செய்யும் போதுதான் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எழுதினார். இதுதான் மோடி, இதுதான் மோடியின் சிந்தாந்தம், சிந்தனையாகும்.

எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் போன்றவை என்னுடைய தந்தை(ராஜிவ்காந்தி) ஆட்சியில் இருக்கும் போது, அவர் பிரதமாக இருக்கும் போது கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்தச் சட்டங்களை எல்லாம் இப்போது நீர்த்துப்போகச் செய்ய பிரதமர் மோடி அனுமதிக்கிறார். எஸ்சி,எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக உத்தரவுகளைப் பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஜந்தர்மந்தரில் கூடியிருக்க மக்கள் கூட்டம்

இந்தத் தீர்ப்பை அளித்த ஏ.கே.கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நாட்டில் தலித்துகளின் நலன்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம், தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.

ஹைதராபாத்தில் பல்கலையில் படித்த ரோகித் வெமுலா என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு ஏராளமான மனவழுத்தங்கள் தரப்பட்டுள்ளன. தலித்துகள் நசுக்கப்படும் சூழல் இந்தியாவுக்குத் தேவையில்லை. இந்தியாவில் ஒவ்வொருவரும் வளர்ச்சி பெற வேண்டும், முன்னேற்றம் காணவேண்டும்.

தலித்துகளுக்கு எதிரான சிந்தனையுடன் இருக்கும் மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்அமைப்புக்கும் எதிராக நாடே எழுந்து நிற்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

LEAVE A REPLY